மணிப்பூர்: மணிப்பூரின் மலைப்பகுதிகளில் தொடர்ந்து இனப் பதற்றம் நிலவி வருகிறது.
அரிசி, எரிபொருள் போன்ற அத்தியாவசியப் பொருள்களை ஏற்றிச் சென்ற வாகனங்களைச் சில நாட்களாகக் குக்கி இன அமைப்புகள் தடுத்து நிறுத்திச் சாலை மறியல்களை நடத்திவந்தன.
எனவே எல்லைப் பாதுகாப்புப் படையினரின் உதவியுடன் லாரிகள் வெள்ளிக்கிழமை (மே 29) இம்பால் வட்டாரத்திலிருந்து உக்ருல் பகுதியை நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் காலை 10 மணியளவில் சென்றுகொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத நபர்கள் அவற்றின்மீது ஆயுதங்களைக் கொண்டு தாக்கினர்.
துப்பாக்கிச் சூட்டில் லாரியை ஓட்டிவந்த அதன் ஓட்டுநர் கொல்லப்பட்டார். காவல்துறை அதிகாரி படுகாயமடைந்தார். அந்த ஓட்டுநர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 57 வயது நிதீஷ் குமார் என்று அடையாளம் காணப்பட்டது.
மாநில முதல்வர் கண்டனம்
மணிப்பூர் முதல்வர் யும்னம் கேம்சந்த் சிங், சம்பவத்தை வன்மையாகக் கண்டித்தார். மாநிலத்தில் அமைதி திரும்ப அரசாங்கம் எடுத்துவரும் முயற்சியைச் சீர்குலைக்கும் நோக்கத்துடன் தாக்குதல் அடையாளம் தெரியாதோரால் நடத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
அன்றைய தினம் இம்பால் வட்டாரத்தின் கிழக்குப் பகுதியில் குக்கி அமைப்பினர் நடத்திவந்த சாலை மறியலைப் பாதுகாப்புப் படையினர் கலைக்க உதவியதோடு சரக்கு வாகனங்களை அங்கிருந்து வெளியேற்றினர். அதன்பிறகு தாக்குதல் நடந்துள்ளது.

