புதுடெல்லி: மணிப்பூர் மாநிலத்தில் இரு சமூகத்தினரிடையே நீடிக்கும் சச்சரவிற்குத் தீர்வுகாண மத்திய அரசாங்கம் பேச்சு நடத்திவருவதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 17) செய்தியாளர் கூட்டத்தில் அவர் இவ்வாறு கூறினார்.
மணிப்பூரில் கடந்த வாரம் ரத்து செய்யப்பட்டிருந்த இணைய, கைப்பேசி சேவைகள் திங்கட்கிழமை மீண்டும் வழக்கநிலைக்குத் திரும்பின.
முன்னதாக, சென்ற வாரம் மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம் வன்முறையில் முடிந்தது. பெரும்பான்மை ‘மைத்தேயி’ இனத்தவர்க்கும் சிறுபான்மை ‘குகி’ இனத்தோர்க்கும் இடையே புதிதாக மோதல்கள் ஏற்பட அது வழிவகுத்தது.
“மணிப்பூரில் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர முடியும் என்று நம்புகிறோம்,” என்று அமைச்சர் அமித்ஷா செய்தியாளர்களிடம் கூறினார்.
இரு பிரிவினர்க்கும் இடையே புரிதல் ஏற்படாவிட்டால் இந்த விவகாரத்திற்குத் தீர்வுகாண இயலாது என்றார் அவர். வருங்கால முயற்சிகளுக்கான வழிகாட்டித் திட்டத்தை அரசாங்கம் வரைந்திருப்பதாகவும் அவர் சொன்னார்.
மணிப்பூரில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான அரசாங்கம் ஆட்சியில் உள்ளது.
இம்பால் பள்ளத்தாக்கிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மாநில அரசாங்கம் சென்ற வாரம் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்தது. மியன்மார் எல்லையில் உள்ள அரசாங்க, தனியார் கல்லூரிகள் சிலவற்றைச் சில நாள்கள் மூடவும் உத்தரவிடப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
குறிப்பிட்ட நேரத்தில் ஊரடங்கு இன்னும் சில பகுதிகளில் நடப்பில் இருந்தாலும் பள்ளிகளைச் செவ்வாய்க்கிழமை மீண்டும் திறக்கலாம் என்று அரசாங்க உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.