தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மணிப்பூரில் 13 நாள்களுக்குப் பிறகு, நவம்பர் 29ஆம் தேதி பள்ளிகள் திறப்பு

1 mins read
e29d9847-de29-4f2d-9c74-8b464e86cda0
பள்ளிகள் மீண்டும் திறப்பு. - கோப்புப் படம்: இந்திய ஊடகம்

இம்பால்: மணிப்பூரின் இம்பால் மற்றும் ஜிரிபாம் ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகள் 13 நாள்களுக்குப் பிறகு நவம்பர் 29 முதல் மீண்டும் தொடங்கும் என அம்மாநில அரசு வியாழக்கிழமை அறிவித்தது.

மணிப்பூரில் மைதேயி, குகி இனத்தவரிடையே கடந்தாண்டு மே மாதம் மோதல் ஏற்பட்டு வன்முறையாக மாறியது. ஓராண்டுக்கு மேலாகியும் இரு தரப்பினரிடையே மோதல்போக்கு நீடித்து வருகிறது.

இந்நிலையில், வடகிழக்குப் பகுதியில் நவம்பர் 11ஆம் தேதி இருவர் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர். மேலும் மூன்று பெண்கள் மற்றும் 3 குழந்தைகளைக் கிளர்ச்சியாளர்கள் கடத்திச் சென்றனர். அவர்களை மீட்கக் கோரி மணிப்பூரின் ஜிரிபம் மாவட்டத்தில் நவம்பர் 16ல் கலவரம் மூண்டது. இந்தக் கலவரத்தால் பலர் பாதிக்கப்பட்டனர்.

சட்டம்-ஒழுங்கு சீர்கெடுவதைத் தடுக்கும் வகையில் மணிப்பூரின் பதற்றமான பகுதிகளில் நவம்பர் 16ஆம் தேதி முதல் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. இணையச் சேவை துண்டிக்கப்பட்டது.

இதற்கிடையில் நிலைமை சற்று மேம்பட்டுள்ளதால் கல்வி நிறுவனங்கள் செயல்படுவதற்கான அறிக்கையைப் பள்ளிக்கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, அரசு, அரசு உதவிபெறும், தனியார் மற்றும் மத்தியப் பள்ளிகள் அனைத்தும் நவம்பர் 29 முதல் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இம்பால் பள்ளத்தாக்கு மாவட்டங்கள், ஜிரிபாம் ஆகிய பகுதிகளில் நவம்பர் 28ஆம் தேதி வரை தடை உத்தரவு அமலில் உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். வெள்ளிக்கிழமை முதல் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படுமா அல்லது தொடருமா என்பது இதுவரை புதிய உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை என்றார்.

குறிப்புச் சொற்கள்