மணிப்பூரில் மீண்டும் வன்முறை; நான்கு பேர் கைது

மணிப்பூரில் மீண்டும் வன்முறை; நான்கு பேர் கைது

1 mins read
164a4288-161d-406e-9318-ecae70261e30
தற்போது திங்குங்கெய் உள்ளிட்ட மேலும் சில பகுதிகளுக்கும் வன்முறை பரவியுள்ளது. இதனால் போக்குவரத்து முடங்கியுள்ளது. - படம்: ஹப் நியூஸ்
Google News Preferred Icon

இம்பால்: மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடித்ததை அடுத்து, அம்மாநிலக் காவல்துறை நான்கு பேரைக் கைது செய்தது.

அங்குள்ள விஷ்ணுபூர் மாவட்டத்தில் அண்மையில் நிகழ்ந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் ஐந்து வயதுச் சிறுவனும் ஆறு மாதப் பச்சிளங் குழந்தையும் உயிரிழந்தனர். இதைக் கண்டித்து சம்பவம் நிகழ்ந்த டிரோங்லாவ்பி பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை (மார்ச் 14) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அப்பகுதியில் சமூக விரோதிகள் சிலர் ஆயுதங்களுடன் ஊடுருவியிருப்பதாக வதந்தி பரவியது. இதனால் சூழ்நிலை பதற்றமான நிலையில், பாதுகாப்புப் படையினர் வந்து சேர்ந்தனர்.

அவர்களைக் கண்டதும் ஆவேசமடைந்த போராட்டக்காரர்கள் பாதுகாப்புப் படையினரின் வாகனங்களைத் தடுத்து நிறுத்தியதுடன், சில வாகனங்களைச் சேதப்படுத்தி, தீ வைத்ததாகக் தெரிகிறது. மேலும், பாதுகாப்புப் படையைச் சேர்ந்த சில வீரர்களை சிறைபிடிக்கவும் முயற்சி செய்ததாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து, வன்முறை மூண்ட பகுதிகளுக்கு கூடுதல் படைகள் அனுப்பப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே, டிரோங்லாவ்பி பகுதியில் போராட்டக்காரர்களைக் கலைக்க கண்ணீர்ப் புகைக்குண்டுகள் வீசப்பட்டன. அப்போது வன்முறையில் ஈடுபட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். வன்முறையில் 18 பேர் காயமடைந்தனர்.

தற்போது திங்குங்கெய் உள்ளிட்ட மேலும் சில பகுதிகளுக்கும் வன்முறை பரவியுள்ளது. இதனால் போக்குவரத்து முடங்கியுள்ளது.

வன்முறையைக் கட்டுப்படுத்த விஷ்ணுபூர் மாவட்டத்தில் 163வது பிரிவின்கீழ் மாவட்ட ஆட்சியர் சில தடை உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்
மணிப்பூர்கலவரம்உயிரிழப்பு