மணிப்பூரில் வன்முறை, துப்பாக்கிச்சூடு: கணவன், மனைவி உட்பட மூவர் பலி

மணிப்பூரில் வன்முறை, துப்பாக்கிச்சூடு: கணவன், மனைவி உட்பட மூவர் பலி

2 mins read
d1a1c743-5690-4429-8cf0-68cf42dbcbf7
மணிப்பூரின் குல்லன் கிராமத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை மூண்ட வன்செயல்களைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. - படம்: தினமலர்

இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் வெடித்த வன்முறையில் கணவன், மனைவி உட்பட மூவர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

மணிப்பூரின் காங்போக்பி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணியளவில் வன்முறை மூண்டதில், ஆயுதம் ஏந்திய கும்பல் தாக்குதலில் ஈடுபட்டது.

மாவட்டத்தின் சைது-கம்பாசோல் துணைப் பிரிவில் உள்ள லோய்போல் குல்லென் கிராமத்தில் குகி சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்குச் சொந்தமான பல வீடுகள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டதாக உள்ளூர்வாசிகள் கூறினர். இருப்பினும், குகி சமூக அமைப்பான ‘குகி இன்பி மணிப்பூர்’ விடுத்த அறிக்கையில் ஏழு வீடுகளும் பொதுமக்களின் சொத்துகளும் தீயில் கருகி பெரும் சேதம் ஏற்பட்டதாகக் கூறியது.

இரு குழுக்களுக்கு இடையே பல நிமிடங்கள் நீடித்த துப்பாக்கிச்சூட்டில் மூவர் உயிரிழந்தனர். அவர்களில் இருவர் கணவன்-மனைவி.

கிராம மக்கள் துப்பாக்கிச் சூட்டிற்குப் பயந்து பாதுகாப்பைத் தேடி அருகிலுள்ள வனப்பகுதிகளுக்கு ஓடியதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மணிப்பூர் மாநில துணை முதல்வர் நெம்ச்சா கிப்ஜென் இந்தத் தாக்குதலைக் கண்டித்ததுடன், இதற்குப் பொறுப்பானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அடையாளம் தெரியாத ஆயுதம் ஏந்திய சமூக விரோதிகளால் மூன்று அப்பாவிகள் கொல்லப்பட்டதும் வீடுகள் எரிக்கப்பட்டதும் துயரமான மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத செயல்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

“அரசு இந்தச் சம்பவத்தைக் கடுமையானதாகக் கருதுகிறது. இந்தச் சம்பவத்துக்குப் பொறுப்பானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மக்களின் பாதுகாப்பும் நலனுமே எங்கள் முன்னுரிமை. அதனால் மக்கள் அமைதி காக்க வேண்டும்,” என்றும் துணை முதல்வர் தெரிவித்துள்ளார்.

திடீரென்று நிகழ்ந்த இந்த மோதலுக்கான காரணம் குறித்தோ மோதலில் ஈடுபட்டவர்கள் குறித்தோ அதிகாரிகள் இன்னும் அதிகாரபூர்வத் தகவல் எதனையும் வெளியிடவில்லை.

குறிப்புச் சொற்கள்