மணிப்பூர்: மணிப்பூர் மாநிலத்தில் நடந்த இனக் கலவரத்தில் சேதமடைந்த மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட சொத்துகளின் விவரத்தை மணிப்பூர் அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த 2023ஆம் ஆண்டு மே 3ஆம் தேதி மைத்தேயி, குகி இனத்தவரிடையே கடுமையான மோதல் உருவாகி வன்முறை வெடித்தது. அந்த வன்முறையில் இரு தரப்பிலும் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஏராளமான மக்கள் வீடுகளை இழந்து பாதுகாப்பு கோரி நிவாரண முகாம்களை நாடி வந்தனர். வன்முறை தொடங்கி ஓராண்டைத் தாண்டியும் இன்னும் அவ்வப்போது வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. வன்முறை தொடர்பான ஏராளமான வழக்குகள் விசாரணையில் உள்ளன.
அந்த மாநிலத்தில் வன்முறை தொடர்பான வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வு இழப்பீடு ஆகியவற்றை வழங்குவதில் முறைகேடுகள் எதுவும் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்ய, முன்னாள் நீதிபதிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. மேலும், வன்முறை தொடர்பான வழக்குகளின் விசாரணைகளைக் கண்காணிக்குமாறு மகாராஷ்டிராவின் முன்னாள் காவல்துறைத் தலைவர் தத்தாத்ரே பத்சல்கிகர் என்பவரை உச்ச நீதிமன்றம் நியமித்தது.
இந்நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு மீண்டும் வன்முறை குறித்த விசாரணையைத் தொடங்கியுள்ளது. அப்போது, கலவரத்தின்போது சேதமான சொத்துகள் குறித்த விவரங்களைத் தாக்கல் செய்யுமாறு மணிப்பூர் அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
மேலும், குற்றவாளிகளுக்கு எதிராக காவல்துறை எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்த விவரத்தையும் நீதிமன்றம் கேட்டுள்ளது. இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை ஜனவரி 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இதற்கிடையே, மணிப்பூரில் 2023 மே மாதம் முதல் தொடர்ந்து நடந்துவரும் வன்முறைச் சம்பவங்களைக் கண்டித்து இந்திய தேசிய மேம்பாட்டுக் கூட்டணி என்ற இயக்கத்தின் ஆதரவாளர்களும் சமூக ஆர்வலர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். “மணிப்பூரை இன்னொரு காஸாவாக்க வேண்டாம். எங்களுடைய எதிர்காலத்தை அழித்துவிடாதீர்கள். கல்வியும் பாதுகாப்பும் மக்களின் உரிமை. அந்த உரிமையை மணிப்பூர் மக்களுக்குக் கொடுக்க வேண்டும்,” என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.