இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் பரவியுள்ள வன்முறையால் ஒன்பது பேர் மாண்டுவிட்டனர்.
வன்முறையில் உயிரிழந்த ஒருவரின் துண்டிக்கப்பட்ட தலையைக் கண்டறிந்து ஒப்படைக்கக் கோரி நாகா பழங்குடியின அமைப்பு அம்மாநில அரசுக்கு 48 மணி நேரக் கெடு விதித்துள்ளது.
காங்போக்பி மாவட்டத்தில் உள்ள மகுய் அசாங் கிராமத்தில் கடந்த சனிக்கிழமை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், அஜின்போ (52) என்பவர் படுகொலை செய்யப்பட்டார். அவரது உடல் மீட்கப்பட்டு, உடற்கூராய்வுக்காக இம்பாலில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறவும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் பாதிக்கப்பட்ட நாகா சமூகத்தினருக்கும் தங்கள் ஆதரவைத் தெரிவிக்கவும் அங்கு ஏராளமானோர் கூடினர்.
இருப்பினும், அவரது துண்டிக்கப்பட்ட தலை கிடைக்காததால், உடலை வாங்க குடும்பத்தினரும் நாகா அமைப்பினரும் மறுத்துவிட்டனர்.
அஜின்போவின் தலை மீட்கப்பட்டு குடும்பத்திடம் ஒப்படைக்கப்படும் வரை உடற்கூராய்வு நடத்த அனுமதிக்க இயலாது என மணிப்பூர் கூட்டமைப்புப் பழங்குடியினர் மன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
மேலும், துண்டிக்கப்பட்ட தலையைக் கண்டறியத் தவறும் பட்சத்தில் தீவிரப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.
அண்மையில் காம்ஜோங் மாவட்டத்தில் ஒரு பெண்மணி சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து குகி, நாகா ஆயுதமேந்திய குழுக்களுக்கு இடையே மோதல் வெடித்தது. காம்ஜோங், உக்ருல், காங்போக்பி பகுதிகளில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் இதுவரை ஒன்பது பேர் உயிரிழந்துவிட்டனர்.
நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவரவும், அமைதியை நிலைநாட்டவும் தேவையான உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறு முதலமைச்சர் ஒய். கேம்சந்த் சிங் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து மணிப்பூர் முதல்வர் கேம்சந்த் சிங் விடுத்துள்ள அறிக்கையில், பொதுமக்கள் மீதான தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் சட்ட ஒழுங்கை மீட்டெடுக்கவும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அமைதியை நிலைநாட்ட அனைத்து சமூகத் தலைவர்களும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பிப்ரவரி முதல் தீவிரமடைந்துள்ள இந்த மோதல்களில் இதுவரை ஐம்பதுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துவிட்டதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
