இம்பால்: இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தின் ஜிரிபாம் மாவட்டத்தில் காவல்துறையினருக்கும் மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக நம்பப்படுகிறது.
அதில் குறைந்தது ஓர் ஆர்ப்பாட்டக்காரர் கொல்லப்பட்டதாகவும் இன்னொருவர் காயமுற்றதாகவும் இந்துஸ்தான் டைம்ஸ் போன்ற ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் அசாம் மாநிலத்தின் கச்சார் மாவட்டத்தில் உள்ள பராக் ஆற்றில் 65 வயது மாது, அவரின் இரண்டரை வயது மகன் ஆகியோரின் சடலங்கள் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து வெடித்த வன்முறையில் ஆர்ப்பாட்டக்காரர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மணிப்பூரில் வன்முறை தொடர்வதையடுத்து அங்கு செவ்வாய்க்கிழமை (நவம்பர் 19) வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள காவல் நிலையங்களும் மூடப்பட்டுள்ளன.
முன்னதாக, மணிப்பூரின் ஆளும் கட்சியான பாரதிய ஜனதா கட்சிக்குத் (பாஜக) தாங்கள் வழங்கிய ஆதரவை தேசிய மக்கள் கட்சி (NPP - என்பிபி) மீட்டுக்கொண்டுள்ளது.
பாஜக நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவரத் தவறியது அதற்குக் காரணம் என்று தேசிய மக்கள் கட்சி குற்றஞ்சாட்டியது.
எனினும், 60 சட்டசபை இடங்களைக் கொண்ட மணிப்பூரில் பாஜகவுக்கு இன்னமும் தனிப் பெரும்பான்மை உள்ளது. அம்மாநிலத்தில் 32 இடங்களைத் தன்வசம் வைத்துள்ள பாஜகவுக்கு ஜனதா தளம் (Janata Dal), நாகா மக்கள் முன்னணி (NPF) ஆகிய கட்சிகளைச் சேர்ந்த மொத்தம் 11 சட்டசபை உறுப்பினர்கள் ஆதரவு தந்து வருகின்றனர்.
இவ்வாண்டு தொடக்கத்தில் குக்கி மக்கள் கூட்டணி (KPA) மணிப்பூரில் பாஜகவுக்கான ஆதரவை மீட்டுக்கொண்டது. மணிப்பூரின் வன்முறையைக் கட்டுக்குள் கொண்டுவர அம்மாநில அரசாங்கம் நெருக்குதலை எதிர்நோக்குகிறது.
தொடர்புடைய செய்திகள்
2023ஆம் ஆண்டு மே மாதத்திலிருந்து மணிப்பூரில் தொடரும் இன ரீதியான வன்முறையில் 220க்கும் அதிகமானோர் பலியாகிவிட்டனர்.