கோலாலம்பூர்: தான் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது தன் பிள்ளைகளுக்கு முன்னாள் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கல்வி உபகாரச் சம்பளம் வழங்க முன்வந்தார் என்று மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.
திரு மன்மோகன் வியாழக்கிழமையன்று (டிசம்பர் 26) தமது 92ஆவது வயதில் காலமானார். அவருக்கு உலகத் தலைவர்கள் பலரும் புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அவ்வகையில், தம்மிடம் காட்டிய கனிவன்பைச் சுட்டி, திரு மன்மோகனை ‘உண்மையான நண்பர்’ எனக் குறிப்பிட்டுள்ளார் திரு அன்வார்.
அப்போது, அவரது உதவியைத் தான் ஏற்க மறுத்தபோதும், திரு மன்மோகனின் அச்செயல் அவரது ‘வியத்தகு மனிதநேயத்தையும் தாராள மனப்பான்மையையும்’ வெளிப்படுத்துவதாக அமைந்தது என்று திரு அன்வார் கூறியுள்ளார்.
“அத்தகைய பெருந்தன்மைமிக்க செயல்களே அவரை வரையறுக்கும். அவை என்றென்றும் என் நெஞ்சில் பதிந்திருக்கும்,” என்று ஃபேஸ்புக் பதிவு வழியாகப் பிரதமர் அன்வார் தெரிவித்துள்ளார்.
இந்தியப் பொருளியல் சீர்திருத்தங்களின் சிற்பி என்று திரு மன்மோகனைக் குறிப்பிட்ட அவர், உலகப் பெரும்பொருளியல்களில் ஒன்றாக இந்தியா உருவெடுத்ததில் தாதியாகத் திகழ்ந்தவர் என்றும் புகழாரம் சூட்டினார்.
1990களில் தாங்கள் இருவரும் தத்தம் நாடுகளின் நிதியமைச்சர்களாக இருந்ததைச் சுட்டிய திரு அன்வார், திரு மன்மோகன் நடைமுறைப்படுத்திய பொருளியல் உருமாற்ற கொள்கைகளின் தொடக்க ஆண்டுகளைக் காணும் அரிய வாய்ப்பு தமக்குக் கிடைத்தது என்றும் பகிர்ந்துகொண்டுள்ளார்.
வரும் நாள்களில் திரு மன்மோகனுக்குச் சூட்டப்படும் புகழாரங்களுக்கு அவர் முற்றிலும் தகுதியானவர் என்றும் பிரதமர் அன்வார் கூறியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
கடந்த 2004 முதல் 2014ஆம் ஆண்டுவரை இந்தியப் பிரதமராக இருந்த திரு மன்மோகன், உடல்நலக்குறைவால் டெல்லி மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரது மறைவையொட்டி ஏழு நாள் துக்கம் கடைப்பிடிக்கப்படும் என்று இந்திய அரசு அறிவித்துள்ளது.