புதுடெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடல் டெல்லி நிகம்போத் காட் பகுதியில் முழு அரசு மரியாதையுடன் சீக்கிய முறைப்படி சனிக்கிழமை (டிசம்பர் 28) தகனம் செய்யப்பட்டது. இறுதிச் சடங்கில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
காங்கிரஸ் தலைமையகத்தில் அஞ்சலி
முன்னதாக, டிசம்பர் 28 காலை மன்மோகன் சிங்கின் உடல் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து காங்கிரஸ் தலைமையகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்கு காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, ப.சிதம்பரம், கே.சி.வேணுகோபால், ஜெயராம் ரமேஷ், சசி தரூர், பவன் கெரா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் மன்மோகன் சிங்கின் உடலுக்கு மலர் வளையம் வைத்தும் மலர்களைத் தூவியும் அஞ்சலி செலுத்தினர்.
நிகம்போத் காட் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்ட உடல்
மன்மோகன் சிங்கின் மனைவி குர்ஷரன் கவுரும், காங்கிரஸ் தலைமையகத்துக்கு வந்து கணவரின் உடலுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தியதைத் தொடர்ந்து மன்மோகன் சிங்கின் உடல் அங்கிருந்து டெல்லி யமுனை நதிக்கரையில் உள்ள நிகம்போத் காட் எரியூட்டுத் தலத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
நிகம்போத் காட் பகுதிக்கு வருகை தந்து இந்திய அதிபர் திரௌபதி முர்மு, துணை அதிபர் ஜக்தீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக தலைவரும் மத்திய அமைச்சருமான ஜெ.பி. நட்டா, மக்களவை சபாநாயகர் ஒம் பிர்லா, பூட்டான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கேல் வாங்சுக், டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா, முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் சவுஹான் உள்ளிட்டோர் மன்மோகன் சிங்கின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
முன்னதாக, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் இறுதிச் சடங்குகள் நடைபெறும் இடத்தில் அவருக்கு நினைவிடம் அமைக்கும் வண்ணம் இடம் ஒதுக்குமாறு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வேண்டுகோள் விடுத்தார். அவ்வாறு இடம் ஒதுக்குவது, எளிய பின்னணியில் இருந்து உயர்ந்த ஒரு தலைவருக்கு செலுத்தும் மரியாதையாக இருக்கும் என்றும் அவர் கூறினார். இதையடுத்து, மத்திய அமைச்சரவைக் கூட்டம் கூட்டப்பட்டு, அதன் முடிவுகள் மல்லிகார்ஜுன கார்கேவுக்குத் தெரிவிக்கப்பட்டது. முன்னாள் பிரதமர்களுக்கு நினைவிடம் அமைப்பது தொடர்பாக அறக்கட்டளை உருவாக்கப்பட்டு அதன் முடிவுகளின்படி மன்மோகன் சிங்குக்கு நினைவிடம் கட்ட அரசு இடம் ஒதுக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
திரு சிங்கின் மறைவு பற்றித் தீர்மானம் நிறைவேற்றிய காங்கிரஸ் கட்சி செயற்குழு, திரு சிங் இந்திய அரசியல், பொருளியல் முகப்பை மாற்றியமைத்ததுடன் அவர் ஆற்றிய சிறப்பான பணியால் உலகம் முழுவதும் பெருமதிப்பு பெற்றுத் திகழ்ந்தார் எனப் புகழாரம் சூட்டியது.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் மறைவுக்கு வெள்ளிக்கிழமை (டிசம்பர் 27ஆம் தேதி) அஞ்சலி செலுத்திய பிரதமர் நரேந்திர மோடி அவரது மறைவு ஒரு பேரிழப்பு என்றும் இந்தியா ஒரு திறமையான தலைவரை இழந்துவிட்டதாகவும் தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சித் தலைவி திருவாட்டி சோனியா காந்தி, திரு சிங்கின் இறப்பு தமக்கு தனிப்பட்ட முறையில் ஓர் இழப்பு என்றும் அவர் தனக்கு ஒரு நண்பராக, சித்தாந்தவாதியாக, வழிகாட்டியாக இருந்தார் எனப் புகழ்ந்தார். அவரது மறைவு நாட்டில் ஈடு செய்யமுடியாத ஒரு வெற்றிடத்தை விட்டுச் சென்றுள்ளதாக திருவாட்டி சோனியா காந்தி கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
திரு சிங்கின் மறைவு குறித்துப் பேசிய அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், அவர் இந்திய-அமெரிக்க உத்திபூர்வ பங்காளித்துவ உறவை போற்றிப் பாராட்டியவர்களில் முக்கியமானவர் என்று விளக்கினார். அவர் இரு நாடுகளும் நெருங்கி வரக் காரணமாக விளங்கினார் எனப் புகழாரம் சூட்டினார்.
மேலும், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ரஷ்ய அதிபர் விளாடிமர் புட்டின் உட்பட பல உலகத் தலைவர்களும் திரு சிங்கின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர்.