சென்னை: மருதமலை குடமுழுக்கு விழாவில் தமிழில் மந்திரங்கள் ஓதப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை உறுதியளித்துள்ளது.
கோவையை அடுத்த மருதமலையில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணியசுவாமி கோவில் முருகப்பெருமானின் 7ஆவது படைவீடு என பக்தர்களால் போற்றப்படுகின்றது.
இந்தக் கோவிலின் குடமுழுக்கு விழா வரும் ஏப்ரல் 4ஆம்தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ளது.
இந்தக் குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்த உத்தரவிட வேண்டும் எனக்கோரி சுரேஷ்பாபு என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
நாம் தமிழர் கட்சியின் மாநில செயலாளர் விஜயராகவனும் அதேபோன்ற மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், அவர் குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்துவது தொடர்பாக அரசாணை பிறப்பிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த இரு மனுக்களும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு முன் வெள்ளிக்கிழமை (மார்ச் 28) விசாரணைக்கு வந்தது.
அப்போது, மருதமலை கோவில் குடமுழுக்கின்போது, சமஸ்கிருதத்துக்கு இணையாக தமிழிலும் வேள்விகள் நடத்தப்படும் என்றும் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மருதமலை கோவில் செயல் அலுவலர் சார்பில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
சிறப்பு வழக்கறிஞர் அருண் நடராஜன், வழக்கறிஞர் கார்த்திகேயன் ஆகியோர் அந்தப் பதில் மனுவைத் தாக்கல் செய்தனர்.
அதில், குடமுழுக்கு விழாவில் தமிழ் மற்றும் சமஸ்கிருத மொழிகளில் மந்திரங்கள் ஓதி யாகசாலை பூஜைகள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.
“சிவாச்சாரியார், ஓதுவார் ஆகியோர் தமிழ் மந்திரங்கள் ஓதுவர். பன்னிரு திருமுறைகள், திருப்புகழ், கந்தர் அலங்காரம், திருமுருகாற்றுப்படை உள்ளிட்டவை பாடப்படும்.
“யாகசாலையில் சமஸ்கிருதத்துக்கு இணையாக தமிழுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும். யாக பூஜையின்போது 36 யாக குண்டத்தில் தமிழிலும் வேறு 36 குண்டத்தில் சமஸ்கிருதத்திலும் வேள்விகள் நடத்தப்படும்,” என்று மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

