மும்பை: மகாராஷ்டிராவில் செல்வாக்குடன் வலம்வந்த பாபா ஃபர்சான் என்ற குண்டர் கும்பல் தலைவரின் வீட்டிலிருந்து ரூ.5 கோடி ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டது. மேலும், பேரளவிலான ஆயுதங்களும் கண்டெடுக்கப்பட்டன.
கடந்த 1990களில் மகாராஷ்டிரா மாநிலம் சத்ரபதி சம்பாஜி நகர், அதன் சுற்றுவட்டாரங்களில் பிரபல ரவுடியாக வலம் வந்தார் பாபா ஃபர்சான்.
கட்டப் பஞ்சாயத்து, மிரட்டிப் பணம் பறித்தல், நில விவகாரங்களில் தலையிடுவது எனப் பல்வேறு சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டதால் பாபா ஃபர்சான் மீது பல்வேறு வழக்குகள் பதிவாயின.
மேலும், கொலை முயற்சி, ஆள்கடத்தல், கலவரம் செய்தல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளையும் எதிர்கொண்டிருந்தார்.
உடல்நலக் குறைவு, மூப்பு காரணமாக கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு பாபா ஃபர்சான் காலமானதையடுத்து அவருக்குச் சொந்தமான பங்களா வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மகாராஷ்டிரா காவல்துறை சோதனை மேற்கொண்டது.
ஃபர்சானின் 52 வயதான இரண்டாவது மனைவி ஷீலா சால்வே முன்னிலையில் நடைபெற்ற சோதனையின்போது ரூ.5.26 கோடி கணக்கில் வராத ரொக்கப் பணம் கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும், துப்பாக்கிகள், தோட்டாக்கள், 17 வகையான கத்திகள், 27 கூர்மையான ஆயுதங்கள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன.
பாபா ஃபர்சான் பெயரில் மூன்று துப்பாக்கிகள் அவரது பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்தன.
அவரது வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட நிதி ஆவணங்கள், வங்கிக் கணக்குகள், பினாமி சொத்துகள் ஆகியவை மிக முக்கியமானவை என்றும் 1990களில் தீர்க்கப்படாத பல குற்றவியல் வழக்குகளின் பின்னணியை வெளிக்கொண்டு வரமுடியும் என்றும் மகாராஷ்டிரா காவல்துறை நம்பிக்கை தெரிவித்துள்ளது.


