ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பூஞ்ச், ரஜூரி மாவட்டங்களில் பாகிஸ்தான் நடத்திய பீரங்கித் தாக்குதல்களில் குறைந்தது 31 பள்ளிகள் சேதமடைந்துள்ளன.
தாக்குதல்களில் குறைந்தது 16 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் 13 பேர் பூஞ்ச்சைச் சேர்ந்தவர்கள் என்றும் மூவர் ரஜூரியைச் சேர்ந்தவர்கள் என்றும் நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.
இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் உள்ள அந்த இரு மாவட்டங்களும் பாகிஸ்தானியத் தாக்குதல்களால் ஆக அதிகமாக சேதமடைந்தன. வீடுகள், கல்வி நிலையங்கள் உட்பட நூற்றுக்கணக்கான கட்டடங்கள் சேதமடைந்தன.
பூஞ்சில் 23 பள்ளிகள் தாக்குதல்களுக்கு உள்ளானதாக அதன் தலைமைக் கல்வி அதிகாரி இஃப்திக்கார் ஹுசைன் ஷா நியூ இந்தியன் எக்ஸ்பிரசிடம் தெரிவித்தார். அவற்றில் இரு பள்ளிகள் முழுமையாக சேதமடைந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
தாக்குதல்கள் தொடரும் என்ற அச்சம்கொண்ட பெற்றோர் தங்கள் பிள்ளைகளைப் பள்ளிகளுக்கு அனுப்பாமல் இருக்கின்றனர். 30 விழுக்காட்டு மாணவர்கள் மட்டுமே வகுப்புகளுக்குச் சென்று வருவதாக அவர் சொன்னார். பள்ளிகளுக்கு வருமாறு வாட்ஸ்அப் செயலிக் குழுக்களின் மூலம் தாங்கள் மாணவர்களைக் கேட்டுக்கொண்டுவருவதாக திரு இஃப்திக்கார் தெரிவித்தார்.
எல்லைப் பகுதிக்கு அருகே உள்ள பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை மேலும் குறைவாக இருப்பதாகவும் அவர் சுட்டினார்.
ரஜூரியில் ஏழு பள்ளிகளும் ஒரு கல்விக் கழகமும் தாக்குதலுக்கு உள்ளாகி சேதமடைந்ததாக அந்த மாவட்டத்தின் தலைமை நிர்வாக அதிகாரி இக்பால் ஹுசைன் தெரிவித்தார். எனினும், அப்பள்ளிகளுக்குத் திரும்பும் மாணவர்களின் எண்ணிக்கை தினமும் படிப்படியாக அதிகரித்து வருவதாக அவர் கூறினார்.
பாதிக்கப்பட்ட பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மற்ற பள்ளிகளுக்கு அனுப்பப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டார். தாக்குதல்களால் சேமைடைந்த பள்ளிகள் புதுப்பிக்கப்படும் என்று திரு இக்பால் தெரிவித்தார்.

