2023ல் வயது குறைந்த வாகன ஓட்டுநர்கள் பலர் உயிரிழப்பு

2 mins read
458d20e2-61b2-4708-bdab-405430c158fd
2023ஆம் ஆண்டு இந்தியாவில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் 78,810 பேர் மாண்டனர். அவர்களில் வயது குறைந்த ஓட்டுநர்கள் ஏறத்தாழ 3 விழுக்காடு. - படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: இந்தியாவில் வாகனம் ஓட்ட அனுமதிக்கப்படும் குறைந்தபட்ச வயதை எட்டாத பலர் வாகனம் ஓட்டுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக 2023ஆம் ஆண்டில் 2,537 இளையர்கள் மாண்டதாக அதிகாரிகள் கூறினர்.

வயது குறைந்தோர் வாகனம் ஓட்டுவதைத் தடுக்க சட்டம் கடுமையாக்கப்பட்டுள்ளபோதும் இந்த விதிமீறல் தொடர்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகனம் ஓட்டும் வயது குறைந்தவர்கள் அதிகாரிகளிடம் சிக்கும்போது அவர்களது பெற்றோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இருப்பினும், இளையர்கள் பலர் சட்டத்துக்குப் புறம்பாக வாகனம் ஓட்டுகின்றனர்.

வாகனம் ஓட்டிய 18 வயதுக்குக் குறைவான பலர் உயிரிழந்தனர்.

இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களைக் காட்டிலும் வாகனம் ஓட்டி மாண்ட வயது குறைவானவர்களின் எண்ணிக்கை உத்தரப் பிரதேசத்தில் ஆக அதிகமாக உள்ளது.

அம்மாநிலத்தில் வாகனம் ஓட்டி மாண்ட வயது குறைவானவர்களின் எண்ணிக்கை 573ஆக பதிவாகியுள்ளது.

அதை அடுத்து ஹரியானாவில் 226 இளையர்கள் மாண்டனர்.

மத்தியப் பிரதேசத்தில் 219 பேரும் தமிழ்நாட்டில் 187 பேரும் டெல்லியில் 34 பேரும் உயிரிழந்தனர்.

உயிரிழந்த வயது குறைந்த பெண் ஓட்டுநர்களைப் பொறுத்தவரை, ஹரியானா முதலிடம் வகிக்கிறது. 2023ஆம் ஆண்டில் அங்கு 51 இளம் பெண் ஓட்டுநர்கள் மாண்டனர்.

2023ஆம் ஆண்டு இந்தியாவில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் 78,810 பேர் மாண்டனர். அவர்களில் வயது குறைந்த ஓட்டுநர்கள் ஏறத்தாழ 3 விழுக்காடு.

வயது குறைந்தவர்கள் வாகனம் ஓட்டும்போது அது அவர்களுக்கும் சாலையைப் பயன்படுத்தும் மற்றவர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்துகிறது என்பதை பெற்றோருக்குப் புரியவைப்பது சவால்மிக்கதாக இருப்பதாக அதிகாரிகள் கூறினர்.

குறிப்புச் சொற்கள்