சத்தீஸ்கர்: தண்டகாரண்யச் சிறப்பு வட்டாரக் குழு என்றறியப்படும் மாவோயிஸ்ட் குழுவைச் சேர்ந்த பெண் ஒருவர் தன்டேவாடா எனும் இடத்தில் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
அந்தப் பெண், ரேணுகா என்றழைக்கப்படும் பானு என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். அவருடன் மேலும் சில மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அந்தப் பெண்ணைப் பிடித்துத் தருவோர்க்கு 25 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டிருந்ததாக இந்திய ஊடகங்கள் கூறுகின்றன.
இந்திய நேரப்படி, திங்கட்கிழமை (மார்ச் 31) காலை 9 மணிக்குத் தொடங்கிய துப்பாக்கிச் சண்டையில் மாவோயிஸ்ட்டுகளைப் பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றனர்.
சத்தீஸ்கர் மாநிலத்திற்கும் கர்நாடக மாநிலத்திற்கும் இடையிலான எல்லையில் பாதுகாப்புப் படையினர் மாவோயிஸ்ட்டுகளுக்கு எதிரான நடவடிக்கையை மேற்கொண்டனர்.
இரு மாநிலங்களைச் சேர்ந்த காவல்துறையினரும் அவர்களுக்கு உதவியாகப் பணியில் ஈடுபட்டனர்.
சுட்டுக்கொல்லப்பட்ட பானு, நக்சல்களின் ஊடகப் பிரிவுக்குப் பொறுப்பு வகித்ததாகத் தகவல்கள் கூறுகின்றன. அவர் தெலுங்கானா மாநிலத்தின் வாரங்கல் மாவட்டத்தில் வசித்ததாகத் தெரிகிறது.
சம்பவ இடத்திலிருந்து பானுவின் உடலோடு துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களும் மீட்கப்பட்டதாகக் கூறப்பட்டது.