ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்களுக்கு மராத்தி மொழியறிவு கட்டாயம்: மகாராஷ்டிரா அதிரடி

ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்களுக்கு மராத்தி மொழியறிவு கட்டாயம்: மகாராஷ்டிரா அதிரடி

2 mins read
d4d94ac8-8467-4c6f-9d16-c204daaee214
வாகன ஓட்டுநர் உரிமம் பெற உள்ளூர் மொழி தெரிந்திருக்க வேண்டும் என்று மகாராஷ்டிரப் போக்குவரத்து அமைச்சர் பிரதாப் சர்நாயக் தெரிவித்துள்ளார். - படம்: ஃபிரீ பிரஸ் ஜர்னல்

மும்பை: உரிமம் பெற்ற ஆட்டோரிக்‌ஷா, டாக்சி ஓட்டுநர்களுக்குக் கட்டாயம் மராத்தி மொழி தெரிந்திருக்க வேண்டும் என்ற உத்தரவை இந்தியாவின் மகாராஷ்டிர மாநில அரசு பிறப்பித்துள்ளது.

இந்த உத்தரவு வரும் மே 1ஆம் தேதியிலிருந்து நடைமுறைக்கு வரும் என்று மாநிலப் போக்குவரத்து அமைச்சர் பிரதார் சர்நாயக் அறிவித்துள்ளார்.

அதே நாள்தான் மகாராஷ்டிர நாளாகக் கொண்டாடப்பட இருக்கிறது.

ஓட்டுநர்கள் மராத்தி மொழியை எழுதவும் படிக்கவும் அறிந்துள்ளதை உறுதிப்படுத்தும் நோக்கில் மாநிலத்திலுள்ள 59 வட்டார, துணை வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களிலும் வாகனப் போக்குவரத்துத் துறை உரிமச் சரிபார்ப்பு நடவடிக்கையை மேற்கொள்ளும்.

மராத்தி மொழியறிவு இல்லாத ஓட்டுநர்கள் வாகன ஓட்டுநர் உரிமத்தை இழக்கும் அபாயத்தை எதிர்நோக்குவர்.

இதனிடையே, போலி ஆவணங்களைக் கொடுத்து வாகன ஓட்டுநர் உரிமங்கள் பெற்றது தொடர்பில் போக்குவரத்துத் துறைக்குப் புகார்கள் வந்துள்ளன.

கடந்த வாரம் மீரா-பயந்தர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் 2,617 ஓட்டுநர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களில் 114 பேருக்கு அறவே மராத்தி மொழியறிவு இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டது. நடப்பு ஏப்ரல் மாத இறுதிவரை ஓட்டுநர் உரிமச் சரிபார்ப்பு நடவடிக்கை இடம்பெறும்.

இந்த நடவடிக்கையைத் தற்காத்த அமைச்சர் சர்நாயக், உரிமம் பெற்றபோது மராத்தி மொழியறிவு இருப்பதாக விண்ணப்பதாரர்கள் ஆவணங்களைச் சமர்ப்பித்ததாகக் கூறினார்.

“உள்ளூர் மொழியைத் தெரிந்திருக்க வேண்டும் என்பது எப்போதுமே வாகன ஓட்டுநர் உரிம விதிகளில் ஒன்றாக இருந்து வருகிறது,” என்று அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில், போக்குவரத்துத் துறையின் இந்நடவடிக்கையை பாஜகவின் மும்பை ஆட்டோரிக்‌ஷா ஓட்டுநர் சங்கத்தின் தலைவர் கே.கே. திவாரி சாடியுள்ளார்.

இந்த நடவடிக்கை தேவையற்றது என்ற அவர், ஓட்டுநர்களுக்கு மராத்தி தெரிந்திருக்கவில்லை எனில் எப்படி ஓட்டுநர் உரிமம் வழங்கினீர்கள் என்றும் கேள்வி எழுப்பினார்.

உரிமம் வழங்குவதில் முறைகேடு நடந்திருப்பதாகக் கூறிய அவர், அதற்குக் காரணமான அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

குறிப்புச் சொற்கள்