ஜெய்ப்பூர்: உத்தராகண்ட் மாநிலம் ஜோத்வாராவில் வசிக்கும் பிரபல நகைக்கடை அதிபர் தனக்கு மணப்பெண் தேடினார். இதற்காக இணையம் மூலம் திருமண இணையத் தளத்தில் பதிவு செய்திருந்த நிலையில், ஒரு பெண் அவருக்கு அறிமுகமானார். அவர் தன்னை சீமா என்று அறிமுகம் செய்துகொண்டார்.
சீமாவின் உறவினர்கள் என சிலரும் அறிமுகம் ஆனார்கள். இதையடுத்து ஜெய்ப்பூரில் உள்ள மானசரோவரில் திருமணம் செய்து கொண்டனர். திருமணமாகி நான்கு மாதங்களே ஆன நிலையில், ரூ.6.5 லட்சம் ரொக்கம் மற்றும் ரூ.30 லட்சம் மதிப்புள்ள தங்கம், வெள்ளி, வைர நகைகள் உள்ளிட்ட மதிப்புமிக்க பொருள்களை எடுத்துக்கொண்டு சீமா ஓடிவிட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த நகைக்கடை அதிபர், அந்தப் பெண்ணின் ஊரான டேராடூனுக்கு சென்று விசாரித்தார். அப்போது அங்கு இருந்த சீமா வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாகக் காவல்துறையில் புகார் செய்து விடுவேன் என்று மிரட்டியுள்ளார்.
இதுபற்றி நகைக்கடை அதிபர் அங்குள்ள முரளிபுரா காவல் நிலையத்தில் புகார் செய்தார். காவல் நிலைய அதிகாரி சுனில் குமார் ஜாங்கிட், உதவி ஆய்வாளர் வசுந்தரா ஆகியோர் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படையினர் டேராடூன் சென்று சீமா அகர்வாலைக் கைது செய்தனர். விசாரணையில் அதிர்ச்சித் தகவல்கள் வெளியானது.
கைது செய்யப்பட்ட இளம்பெண் நிக்கி என்ற சீமா அகர்வால் என்பதும் அவர் இணைய திருமணத் தளங்கள் மூலமாக விவாகரத்து பெற்ற பணக்காரர்களைக் குறி வைத்து மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
அவர்களின் முழுமையான தகவல்களைப் பெற்று, பின்னர் திருமணம் செய்து கொண்டு மூன்று, நான்கு மாதங்களில் அவர்களின் நம்பிக்கையைப் பெற்று பல லட்சம் மதிப்புள்ள நகை, பணம், பொருள்களுடன் கம்பி நீட்டுவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
ஏற்கெனவே சீமா கடந்த 2013ஆம் ஆண்டு ஆக்ராவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் மகனைத் திருமணம் செய்துள்ளார். சில நாள்களுக்குப் பிறகு அவர் மீது வரதட்சணை வழக்கு பதிவு செய்து அந்த தொழிலதிபரிடம் இருந்து ரூ.75 லட்சத்தை மிரட்டி பணம் பறித்ததும் தெரியவந்தது.
இதேபோன்று 2017ஆம் ஆண்டு குருகிராமில் உள்ள மென்பொருள் பொறியாளரைத் திருமணம் செய்து அவர் மீதும் அவரது உறவினர் மீதும் பாலியல் வன்கொடுமை புகார் கூறி ரூ.10 லட்சம் பறித்துள்ளார். இதுவரை ஏமாற்றி திருமணம் செய்து ரூ.1.21 கோடி வரை அவர் மோசடி செய்துள்ளார். மேற்கண்ட தகவல்கள் காவல்துறை விசாரணையில் தெரியவந்தது.
தொடர்புடைய செய்திகள்
கைதான இளம்பெண் சீமா வேறு யாரையும் இதேபோன்று மோசடி செய்துள்ளாரா? அவரது மோசடிக்கு உடந்தையாக இருப்பவர்கள் யார்? என்று காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.