ஆந்திராவில் திருமண மோசடி: 19 வயது இளம்பெண் கைது

1 mins read
60fe508e-3369-4308-8333-994930c53c2c
19 வயதில் 9 இளைஞர்களை மணந்து ஏமாற்றினார் வாணி. - கோப்புப்படம்: தினமலர்

ஆந்திரா: ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளத்தைச் சேர்ந்த முத்திரெட்டி வாணி (19) என்ற இளம்பெண், தனது அத்தை சந்தியாவின் தூண்டுதலின் பேரில் தொடர் திருமண மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார். அண்மையில் கர்நாடகாவைச் சேர்ந்த ஒருவரைத் திருமணம் செய்த வாணி ரயிலில் பயணம் செய்யும்போது கழிவறைக்குச் செல்வதாக கூறி ரூ. 1 லட்சம் ரொக்கம், நகைகளுடன் விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் கணவரை ஏமாற்றித் தப்பியோடினார். மனைவியைக் காணாததால் பதறிய கணவர் வீட்டில் இருந்த பணம், நகை எல்லாம் காணவில்லை என்பதை அறிந்து, தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தனர். அதைத் தொடர்ந்து, இச்சாபுரத்தில் உள்ள வாணியின் அத்தை சந்தியா என்பவரின் வீட்டில் வாணி இருக்கும் தகவல் மணமகன் வீட்டாருக்குக் கிடைத்தது. வாணியைத் தேடி அங்கு சென்ற அவர்கள், சந்தியாவிடம் தங்களது பணத்தைத் திருப்பித் தருமாறு கேட்டனர். ஆனால், அவர் பணத்தைத் திருப்பித் தர முடியாது எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதையடுத்து மணமகன் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் வழக்குத் தொடர்ந்தனர். போலிஸ் விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின. வாணியும் அவருடைய அத்தையும் சேர்ந்து, திருமணமாகாத அப்பாவி இளைஞர்களைத் திருமணம் செய்து, அவர்களிடம் நகை, பணத்தைப் பறித்துவிட்டு இருவரும் தப்பி விடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். இதுவரை கர்நாடகா, ஒடிசா, கேரளா மாநிலங்களில் திருமணமாகாத 8 இளைஞர்களை இவர்கள் ஏமாற்றியுள்ள தகவல் போலிஸ் விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்