திருமண மோசடி; பல கோடி ரூபாய் சுருட்டல்: 9வது திருமணத்தில் கைதான பெண்

2 mins read
d945aae2-59f2-4b6c-b215-065f85ee6697
கைதான சமீரா பாத்திமா. - படம்: எக்ஸ் தளம்

நாக்பூர்: பணத்துக்காக பல ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்து கோடிக்கணக்கில் பணம் பறித்த பெண், 9வது திருமணத்துக்கு தயாரானபோது கைதானார்.

மகாராஷ்டிர மாநிலம், நாக்பூரைச் சேர்ந்த சமீரா பாத்திமா என்னும் 35 வயதுப் பெண் கடந்த 15 ஆண்டுகளாக பணக்கார இஸ்லாமிய ஆண்களைக் குறிவைத்து மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

ஆசிரியர் என தன்னைக் கூறிக்கொள்ளும் சமீரா, இதுவரை 8 ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்துள்ளார். பின்னர் அவர்களை மிரட்டி பணம் பறித்துள்ளார்.

இறுதியாக, 9வது திருமணத்துக்கு தயாராக இருந்த நிலையில் நாக்பூரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

‘மேட்ரிமோனி’ வலைத்தளம் மற்றும் போலி முகநூல் கணக்குகள் மூலம் பணக்கார இஸ்லாமிய ஆண்களை தொடர்பு கொள்ளும் சமீரா, தன்னை விவாகரத்து பெற்ற பெண்ணாகவும் குழந்தை இருப்பதாகவும் கூறி அவர்களின் அனுதாபத்தையும் நம்பிக்கையும் பெற பாசாங்கு செய்தார்.

அவர்களின் நம்பிக்கையைப் பெற்றவுடன் திருமணம் செய்துகொள்வார். பின்னர் அவர்களை மிரட்டி பணம் பறித்துள்ளார்.இதற்காக ஒரு மோசடிக் கும்பலையும் சமீரா ஒருங்கிணைத்து செயல்பட்டு வந்துள்ளார். கடந்த 15 ஆண்டுகளில் 8 ஆண்களை சமீரா ஏமாற்றியிருப்பதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஒருவரிடம் ரூ. 50 லட்சம் மற்றொருவரிடம் ரூ.15 லட்சம் என பணத்தைப் பறித்துள்ளார். ஏமாற்றப்பட்ட 8 ஆண்களிடம் இருந்தும் கோடிக்கணக்கான பணத்தை மிரட்டல் மூலம் சமீரா பெற்றுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீராவின் வலையில் சிக்கியவர்களில் ரிசர்வ் வங்கியில் முக்கியப் பொறுப்பில் இருக்கும் அதிகாரிகளும் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், பாதிக்கப்பட்டவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் கடந்த ஜூலை 29ஆம் தேதி நாக்பூர் தேநீர் கடையில் சமீராவைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவரின் பின்னணியில் உள்ள மோசடிக் கும்பலுக்கு வலைவிரிக்கப்பட்டு உள்ளது.

குறிப்புச் சொற்கள்