தண்ணீர் தராததால் நின்ற திருமணம்

1 mins read
4eb4e02b-eda6-4058-b6f4-db540dab58dc
வரவேற்பு தினத்தன்று தொடங்கிய தகராறு திருமணம் நடக்கவிருந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை நீடித்தது. - படம்: பிக்சாபே

சாம்ராஜ் நகர்: கர்நாடகாவில் குடிப்பதற்குத் தண்ணீர் சரியான நேரத்தில் வழங்கப்படாதது தொடர்பில் தகராறு ஏற்பட்டு திருமணம் நின்றது.

தாவணகெரே ஜகளூர் பகுதியைச் சேர்ந்தவர் 27 வயது மனோஜ் குமார். இவருக்கும் 22 வயது அனிதாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.

மார்ச் 16ஆம் தேதி திருமணம் நடக்கவிருந்தது. மார்ச் 15ஆம் தேதி இரவு நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இரு குடும்பங்களையும் சேர்ந்த உறவினர்கள், நண்பர்கள், விருந்தினர்கள் என ஏராளமானோர் மண்டபத்தில் திரண்டனர்.

வரவேற்பு நிகழ்ச்சிக்குத் தாமதமாக வந்திருந்தோர், உண்பதற்காகப் பந்தியில் அமர்ந்திருந்தனர். அப்போது உணவுப் பரிமாறிய ஊழியர்கள், விருந்தினர்களுக்கு குடிநீர் வழங்கவில்லை. இதனால் சலசலப்பு ஏற்பட்டது. இது இறுதியில் மணமகன், மணமகள் குடும்பத்தினரிடையே தகராறாக மாறியது.

வரவேற்பன்று தொடங்கிய தகராறு திருமணம் நடக்கவிருந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை நீடித்தது. இதனால் மனமுடைந்த மணமகள் அனிதா திருமணமே வேண்டாம் எனக் கூறினார். அவரை சமாதானம் செய்ய உறவினர்கள் செய்த முயற்சி பலன் அளிக்கவில்லை.

ஒரு கட்டத்தில், மணமகன் மனோஜ் குமாரும் திருமணம் வேண்டாம் என கூறியதால், கடைசி நேரத்தில் திருமணம் நின்றுபோனது. அனைவரும் மண்டபத்தில் இருந்து வெளியேறினர்.

குறிப்புச் சொற்கள்