பாட்னா: தன் மனைவி, கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்ததை அடுத்து, அந்தக் கள்ளக்காதலனின் மனைவியையே திருமணம் செய்து, ஆடவர் ஒருவர் பழிதீர்த்துக்கொண்டார்.
இந்த வினோத நிகழ்வு இந்தியாவின் பீகார் மாநிலம், ககரியா மாவட்டத்தில் நிகழ்ந்தது.
ரூபி தேவி என்ற அப்பெண், 2009ஆம் ஆண்டு நீரஜ் என்பவரை மணந்தார். அவர்களுக்கு நான்கு பிள்ளைகள் பிறந்தன.
ஆனாலும், சில ஆண்டுகள் கழித்து, தன் மனைவிக்கு முகேஷ் என்பவருடன் கள்ளத் தொடர்பு இருப்பதை நீரஜ் கண்டுபிடித்தார்.
இந்நிலையில், கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், ரூபியும் முகேஷும் வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்டனர். தம் பிள்ளைகளில் மூவரையும் ரூபி தம்முடன் அழைத்துச் சென்றுவிட்டார்.
இதனையடுத்து, தன் மனைவியை முகேஷ் கடத்திச் சென்றுவிட்டதாகக் காவல்துறையில் நீரஜ் புகாரளித்தார்.
முகேஷுக்கும் ஏற்கெனவே திருமணமாகி, இரு பிள்ளைகளும் உள்ளனர். இதில் வியப்பு என்னவெனில், அவரின் மனைவி பெயரும் ரூபி தேவிதான்.
இதனையடுத்து, முகேஷின் மனைவி ரூபியை நீரஜ் தொடர்புகொள்ள, இருவருக்குமான பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. அதனைத் தொடர்ந்து, இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவுசெய்தனர். அதன்படி, கடந்த மாதம் 11ஆம் தேதி இருவரும் மணமுடித்துக்கொண்டனர்.
தொடர்புடைய செய்திகள்
இப்போது, இரு குடும்பங்களும் மத்தியப் பிரதேச மாநிலத்தின் இரு வேறு நகரங்களில் வாழ்ந்து வருகின்றன.
இந்த வியப்பளிக்கும் சம்பவத்திற்கு இணையவாசிகள் பலரும் வேடிக்கையாகக் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
"மணமானவர்கள் மீண்டும் ஓடிப்போய் திருமணம் செய்துகொள்கின்றனர். நான் இன்னும் தனியாளாகவே இருக்கிறேன்," என்று ஒருவர் பதிவிட்டுள்ளார்.
"ஒவ்வொரு வினைக்கும் நிகரான எதிர்வினை உண்டு," என்று இன்னொருவர் குறிப்பிட்டுள்ளார்.