திருமண நிகழ்வைக் காணச் சென்றவர் 3,000 ரூபாய்க்கு ‘மாப்பிள்ளை’ ஆனார்!

திருமண நிகழ்வைக் காணச் சென்றவர் 3,000 ரூபாய்க்கு ‘மாப்பிள்ளை’ ஆனார்!

படம்: இந்திய ஊடகம்

01 Feb 2024 - 4:13 pm

1 mins read

லக்னோ: திருமண விழாவைக் காணச் சென்றவரே திடீர் மணமகன் ஆனார்.

ஆனால், உண்மையான மணமகனாக அன்று! 2,000 முதல் 3,000 ரூபாய் பணத்திற்காக அவர் அவ்வாறு காட்சி தந்தார்.

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம், பலியாவில் அரசாங்கம் ஏற்பாடு செய்திருந்த சமூகத் திருமண விழாவில் இது அரங்கேறியது.

இதன்மூலம் பண மோசடி நிகழ்ந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

பலியாவைச் சேர்ந்த பப்லு என்ற ஆடவர், 2024 ஜனவரி 25ஆம் தேதி அங்கு நடந்த சமூகத் திருமண விழாவைக் காணச் சென்றார்.

அங்குச் சென்றபின், சிறிது நேரம் மணமகனாகக் காட்சி தருமாறும் அதற்குப் பணம் தருகிறோம் என்று தன்னிடம் கூறியதாகவும் அவர் சொன்னார்.

தம்மைப்போல அங்கு வந்திருந்த மற்ற ஆடவர்களையும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இப்படித் திடீர் மணமகன்களாக்கியதாகவும் அவர் சொன்னார்.

மண விழாவின்போது மணப்பெண்கள் தாங்களே தங்களுக்கு மாலை சூடிக்கொண்ட காணொளி வெளியானதை அடுத்து, இந்த மோசடி வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

பயனாளிகளுக்கென ஒதுக்கப்பட்ட பணம் அவர்களுக்கு வழங்கப்படவில்லை என்று பலியா மாவட்ட நீதிபதி ரவீந்திர குமார் கூறியதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதனையடுத்து, மோசடி குறித்து உடனடியாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சமூக நலத்துறை உதவி வளர்ச்சி அலுவலகர் உள்ளிட்ட ஒன்பது பேர்மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்
திருமணம்இந்தியாமோசடி