திருமலை: கோடை விடுமுறை காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழக்கத்தைக் காட்டிலும் அதிகமான பயணிகள் திரண்டுள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்தள்ளது.
இதுதொடர்பாக தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த ஐந்து நாள்களாக திருமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.
“வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் இருந்து ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஆக்டோபஸ் படைவீரர் அலுவலகம் வரை பக்தர்கள் காத்திருக்கிறார்கள். இந்தக் கூட்டம் அடுத்த சில வாரங்களுக்கும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்ட நெரிசலைக் கருத்தில்கொண்டு பல்வேறு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஸ்ரீவாரி கோவில் வளாகம், லட்டு விற்பனை மையங்கள் மற்றும் அதிக பக்தர்கள் கூடும் பிற இடங்களைச் சுற்றி நிழற்பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன.
வெப்பத்தில் இருந்து பக்தர்களைப் பாதுகாக்க கோவிலின் நான்கு மாட வீதிகளிலும் செயற்கைக் குளிர்ச்சிக்கான வண்ணம் பூசப்பட்டுள்ளது.
பாத கங்கையம்மன் கோவில் சந்திப்பு முதல் வெளிவட்ட சாலை வரையிலான தரிசன வரிசைப் பாதைகளில் தற்காலிக கழிப்பறைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
கோவிலுக்கு வெளியே நீண்ட வரிசைகளில் காத்திருக்கும் பக்தர்களுக்கு, ஸ்ரீவாரி சேவா சங்க தொண்டர்கள் குடிநீர் மற்றும் உணவு நன்கொடைகளை வழங்கி வருகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
கூட்ட நெரிசலின் தன்மைக்கு ஏற்ப, வெளிவட்டச் சாலையில் உள்ள வழிபாட்டு வரிசைகளில் நடமாடும் முதலுதவி மையமும் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
தேவஸ்தான சுகாதாரத் துறை அதிகாரிகள் மேற்பார்வையின்கீழ், அதிக பக்தர்கள் கூடும் இடங்களில் நடமாடும் குடிநீர் தொட்டிகள் பயன்படுத்தப்பட்டு, ஸ்ரீவாரி சேவா சங்க தொண்டர்கள் வாயிலாக வெளியே வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்குக் குடிநீர் வழங்கி வருகின்றனர்.
கடந்த ஐந்து நாள்களில் மட்டும் 432 ஆயிரத்து 213 பக்தர்கள் ஏழுமலையானை வழிபட்டுள்ளனர். சராசரியாக, நாள் ஒன்றுக்கு 86,000 பக்தர்கள் இறைவழிபாடு செய்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

