போபால்: இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலம், போபால் மாவட்டத்தில் கேட்பாரற்று நின்றிருந்த வாகனம் ஒன்றில் 52 கிலோ தங்கமும் 10 கோடி ரூபாய் ரொக்கப் பணமும் இருந்தன.
அவை அனைத்தையும் வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.
மன்டோரா கிராமத்தில் கைப்பற்றப்பட்ட அந்தப் பணமும் நகைகளும்அண்மையில் சொத்து நிறுவனங்களிலும் கட்டுமான நிறுவனங்களிலும் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளுடன் தொடர்புடையவை என அதிகாரிகள் நம்புகின்றனர்.
போபால், இந்தூர் மற்றும் குவாலியர் மாவட்டங்களில் அந்தச் சோதனைகள் நடைபெற்றன.
கடந்த புதன்கிழமை (டிசம்பர் 18) காலை 6.45 மணியளவில் மூன்று மாவட்டங்களின் 52 வெவ்வேறு இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தப்பட்டது.
ராஜேஷ் சர்மா என்பவருக்குச் சொந்தமான திரிசூல் கட்டுமான நிறுவனத்திலும் அதனுடன் தொடர்பு உடையவர்களின் இடத்திலும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
அப்போது 25 பாதுகாப்புப் பெட்டகங்களும் ஏறத்தாழ 5 கோடி ரூபாய் ரொக்கமும் இருந்ததை அதிகாரிகள் கண்டனர்.
மேலும் ஏராளமான ஆவணங்கள், நகைகள், கைப்பேசிகள், முக்கியமான தரவுகள் அடங்கிய கணினி சேமிப்பு வன்தட்டுகள் போன்றவையும் பறிமுதல் செய்யப்பட்டன.
தொடர்புடைய செய்திகள்
நிலப் பரிவர்த்தனைகளுடன் தொடர்புடைய ரொக்க வைப்புத்தொகையில் வரிஏய்ப்பு செய்யப்பட்டதற்கான ஆதாரங்களும் அதிகாரிகளின் கவனத்துக்கு வந்தன.
குவாலிட்டி குழுமம், இஷான் குழுமம், திரிசூல் கட்டுமானக் குழுமம் ஆகியன அதிகாரிகளின் கண்காணிப்பின்கீழ் வைக்கப்பட்டு உள்ளன.
சொத்துச் சந்தை வியாபாரிகளான தீபக் பாவ்சர், வினோத் அகர்வால், ரூபம் ஷிவானி போன்ற சர்மாவின் கூட்டாளிகளும் கண்காணிப்பு வளையத்தினுள் வைக்கப்பட்டு உள்ளனர்.
முன்னாள் பாஜக அமைச்சருக்குத் தொடர்புள்ள குத்தகைகள், சிஎம் ரைஸ் பள்ளிக்கூடங்கள் கட்டுவதற்கான குத்தகைகள் ஆகியவற்றில் சர்மாவுக்கு சம்பந்தம் இருந்தது விசாரணையில் தெரியவந்தது. பல கோடி ரூபாய் மோசடி தொடர்பில் இன்னும் பல தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகும் என்று அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.

