பெருவாரியான வாக்குப்பதிவு ஆட்சி மாற்றத்தின் அறிகுறி: பிரதமர் மோடி

பெருவாரியான வாக்குப்பதிவு ஆட்சி மாற்றத்தின் அறிகுறி: பிரதமர் மோடி

2 mins read
8b1bd153-ff9f-46b8-b90f-93b907268164
மேற்கு வங்கத்தில் பாஜக அமோக வெற்றி பெறுவது உறுதி என்று தேர்தல் பிரசாரத்தில் பேசிய பிரதமர் மோடி. - படம்: மேக்ஸ்டர்.காம்
multi-img1 of 3

கிருஷ்ணாநகர்: மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலின் முதற்கட்ட வாக்கெடுப்பில் பதிவாகியுள்ள அதிகப்படியான வாக்குகள், மாநிலத்தில் நிகழப்போகும் ஆட்சி மாற்றத்திற்கான தெளிவான அறிகுறி என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

“மக்கள் எப்போதெல்லாம் அதிக அளவில் வாக்களிக்கிறார்களோ, அப்போதெல்லாம் பாஜக தீர்க்கமான வெற்றியைப் பெற்றுள்ளது. அந்த வகையில், மேற்கு வங்கத்தில் பாஜக அமோக வெற்றி பெறுவது உறுதி,” என்று அவர் குறிப்பிட்டார்.

மேற்கு வங்கத்தில் முதல் கட்டமாக 152 தொகுதிகளில் வாக்குப்பதிவு வியாழக்கிழமை நடைபெற்ற நிலையில், இரண்டாம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 29ஆம் தேதி 142 தொகுதிகளுக்கு நடைபெறுகிறது.

இதையொட்டி அங்கு அனல் பறக்க பிரசாரம் நடைபெற்று வருகிறது. மேற்கு வங்காளத்தில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கும் பிரதான எதிர்க்கட்சியாக உள்ள பாஜகவிற்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. பாஜக வேட்பாளர்களை ஆதரித்து கிருஷ்ணாநகர், மதுராப்பூரில் நடைபெற்ற பிரம்மாண்ட பிரசாரக் கூட்டங்களில் மோடி உரையாற்றினார்.

ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் அரசு ஊழலில் திளைப்பதாகவும் மத்திய அரசின் வளர்ச்சித் திட்டங்களை முடக்கி மக்களின் நிதியைச் சுரண்டுவதாகவும் அவர் சாடினார்.

குறிப்பாக, மாநிலத்தில் ஊடுருவல்காரர்களால் பாதுகாப்பு அச்சுறுத்தல் நிலவுவதாகவும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும் கவலை தெரிவித்த மோடி, வரும் மே 4ஆம் தேதியுடன் திரிணாமூல் காங்கிரஸின் ‘குண்டர்கள் ராஜ்ஜியம்’ முடிவுக்கு வரும் என்றார்.

இக்கூட்டத்தில், மகளிருக்கு ஆண்டுக்கு ரூ.36,000 உதவித்தொகையும் மாணவிகளுக்கு ரூ.50,000 கல்வி நிதியுதவி, மீனவர்களுக்கான சிறப்புத் திட்டங்கள் உள்ளிட்ட 10 புதிய வாக்குறுதிகளையும் அவர் பட்டியலிட்டார்.

50 ஆண்டுகளில் இல்லாத வகையில் வன்முறை குறைந்த தேர்தலாக இது அமைந்துள்ளதாகவும் அவர் பெருமிதம் கொண்டார்.

பொய் வாக்குறுதிகளால் மாநில மக்களை வஞ்சித்த திரிணாமூல் காங்கிரசின் மோசமான ஆட்சி மே 4ஆம் தேதியுடன் முடிவுக்கு வரும். அன்றைய தினம் பாஜக சாா்பில் வெற்றிப் பேரணிகள் நடத்தப்படும் என்றாா் அவா்.

குறிப்புச் சொற்கள்