உலகத்தரமிக்க நகராக டெல்லியை மேம்படுத்தும் பெருந்திட்டம் 2047

உலகத்தரமிக்க நகராக டெல்லியை மேம்படுத்தும் பெருந்திட்டம் 2047

100 மாடிக் கட்டடங்கள், 24 மணி நேர நகர்ப்புற மண்டலங்கள், வான் டாக்சி, நீர்வழிப் போக்குவரத்து
படம்: டெக்கான் க்ரோனிக்கல்

21 Aug 2026 - 9:43 pm

2 mins read

புதுடெல்லி: அடுத்த 20 ஆண்டுகளில் இந்தியத் தலைநகரை உலகத் தரம் வாய்ந்த தலைநகரமாக மாற்றும் இலக்குடன் டெல்லி பெருந்திட்டம் 2047ஐ இந்திய வீட்டுவசதி, நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் மனோகர் லால் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 20) வெளியிட்டார்.

டெல்லி மேம்பாட்டு ஆணையம் உருவாக்கியுள்ள அத்திட்டம், நகரின் உள்கட்டமைப்பு, போக்குவரத்து, வீட்டுவசதி, பொருளியலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லவுள்ளது.

உள்கட்டமைப்பு, பொதுப்போக்குவரத்துப் பாதைகள் கொண்ட வணிக மண்டலங்களில் டெல்லியின் தோற்றத்தை மேம்படுத்தும் வகையில் 100 மாடிகளுக்கு உயரமான அதிநவீன வானளாவிய கட்டடங்கள் கட்டப்படும். குறைந்த விலையிலான வீடுகள் உட்பட ஏறக்குறைய 40 லட்சம் புதிய வீடுகள், அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டவும் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

முக்கிய அம்சமாக, ‘24 மணி நேர நகர்ப்புற மண்டலங்கள்’ உருவாக்கப்படும்.

சுற்றுலாப் பயணிகள், வணிகர்களை ஈர்க்கும் வகையில் உணவகங்கள், சந்தைகள், பொழுதுபோக்கு மையங்கள், வணிக வளாகங்கள் இரவு முழுதும் இயங்க அனுமதிக்கப்படும். அந்த மண்டலங்களுக்குச் சாதகமாக 24 மணி நேர மெட்ரோ ரயில் சேவைகளும் இயக்கப்படும்.

மேலும், போக்குவரத்தை நவீனமாக்க வான் டாக்சி சேவை, உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து, 200 கிலோமீட்டர் மிதிவண்டிப் பாதைகள், மெட்ரோ விரிவாக்கம், சாலை மேம்பாடு, போக்குவரத்து நெரிசலைக் குறைக்க சிறப்புக் கட்டணமுறை ஆகியவை அறிமுகப்படுத்தப்படவுள்ளன.

போக்குவரத்து முன்கணிப்பு, பேருந்துகள், வாகன நிறுத்துமிடங்களின் நேரலை நிர்வாகம் ஆகியவற்றிற்கு ஏஐ பயன்படுத்தப்படும்.

இதன் மூலம் டெல்லி மேலும் பசுமையாகவும், தடையற்ற இணைப்பு வசதி கொண்ட நவீன நகரமாகவும் உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம், 5ஜி நெட்வொர்க், கண்ணாடியிழை இணைப்பு, ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையங்கள் போன்ற அதிநவீன மின்னிலக்க உள்கட்டமைப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

டெல்லியின் முக்கிய எதிர்கால வளர்ச்சி மையங்களாக நரேலா, துவாரகா பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

நரேலா பகுதி 138 ஹெக்டர் பரப்பளவில் கல்வி, ஆய்வு, தொடக்க நிறுவனங்கள் அடங்கிய கல்வி மையமாக உருவாக்கப்படும்.

இந்திரா காந்தி அனைத்துலக விமான நிலையம், மெட்ரோ இணைப்புகளுக்கு அருகில் உள்ள துவாரகா பகுதி, அனைத்துலக முதலீட்டு மண்டலமாகவும், அதிநவீன மருத்துவச் சுற்றுலா மையமாகவும் மேம்படுத்தப்படவுள்ளது.

தொழில்துறைப் பகுதிகளில் தரவு மையங்கள் அமைக்க அனுமதிக்கப்படும். 12 மீட்டருக்கும் அதிகமான அகலம் கொண்ட சாலைகளில் கண்ணாடி இழைகளுக்கான உள்கட்டமைப்பு வழங்கப்படும்.

‘தொழில்நுட்பம், புத்தாக்க மண்டலம்’ அமைப்பதற்காக 41 முதல் 62 ஏக்கர் நிலப்பரப்பு ஒதுக்கப்படுகிறது. அதில் பகுதிமின்கடத்தி உற்பத்தி, ஆளில்லா வானூர்தி பரிசோதனை மையம், மாநிலத் தரவு மையம் ஆகியவை அமைக்கப்படவுள்ளன.

அத்துடன், யமுனை வெள்ளப்பெருக்குப் பகுதியை மீளுருவாக்கம் செய்தல், பசுமைப் பகுதிகளை அதிகரித்தல் ஆகியவற்றுடன் நிலப் பயன்பாட்டுப் பிரிவுகள் 133லிருந்து 45 ஆகக் குறைக்கப்பட்டு திட்ட அனுமதிகள் எளிதாக்கப்பட்டுள்ளன.

குறிப்புச் சொற்கள்