புதுடெல்லி: இந்தியாவில் மகப்பேற்று இறப்பு விகிதம் வெகுவாகக் குறைந்துள்ளதாக அண்மைய ஆய்வில் தெரியவந்துள்ளது.
லான்செட் மகப்பேற்றியல் மகளிர் நோய்களுக்கான சிகிச்சை, சுகாதார ஆய்விதழ் வெளியிட்ட ஆய்வறிக்கையில், கடந்த 33 ஆண்டுகளில் மகப்பேற்று இறப்பு விகிதம் 86 விழுக்காடு குறைந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கர்ப்பம் அடைந்த அல்லது மகப்பேற்றுக்குப் பிந்திய 42 நாள்களுக்குள் ஒரு பெண் உயிரிழக்கும்பட்சத்தில், அந்தச் சம்பவம் மகப்பேற்று இறப்பு எனப் பதிவு செய்யப்படுகிறது. ஒரு லட்சம் குழந்தைப் பிறப்புகளை அடிப்படையாகக் கொண்டு அந்த விகிதத்தைக் கணக்கிடுகிறார்கள்.
1990ஆம் ஆண்டு இந்தியாவில் மகப்பேற்று இறப்பு விகிதம், ஒரு லட்சம் குழந்தைகளுக்கு 508 தாய்மார்கள் என்ற அளவில் இருந்தது.
2023ல் அந்த விகிதம் 116க்குக் குறைந்தது. அதன்படி, நாடு முழுவதும் 24,700 தாய்மார்கள் உயிரிழக்க நேரிட்டது.
இதே காலகட்டத்தில் பாகிஸ்தானில் 10,300 தாய்மார்கள் உயிரிழந்துவிட்டனர். எத்தியோப்பியாவில் 11,900, நைஜீரியாவில் 32,900 இதுபோன்ற உயிரிழப்புச் சம்பவங்கள் பதிவாகி உள்ளன.
இந்நிலையில், இந்தியாவில் மகப்பேற்று இறப்பு விகிதம் 86% குறைந்துள்ளதாக ஐநா மகப்பேறு இறப்பு மதிப்பீட்டுக் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் இது 48%ஆக உள்ளது.
உலகம் முழுவதும் 240,000 தாய்மார்கள் கடந்த 2023ஆம் ஆண்டு உயிரிழந்துவிட்டனர். மகப்பேறு இறப்பு விகிதத்தைக் குறைப்பதற்காக நிர்ணயிக்கப்பட்ட இலக்கை 104 நாடுகள் இன்னும் எட்டவில்லை.
தொடர்புடைய செய்திகள்
முன்னதாக, 2030க்குள் மகப்பேற்று இறப்பு விகிதத்தை 70ஆகக் குறைக்க வேண்டும் என உலக நாடுகளுக்கு நீடித்த வளர்ச்சி இலக்குகளின்கீழ் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

