‘கவலைக்குரிய விவகாரம்’: ராகுல் காந்தி, அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பாகிஸ்தான் ஆதரவு குறித்து மோடி

‘கவலைக்குரிய விவகாரம்’: ராகுல் காந்தி, அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பாகிஸ்தான் ஆதரவு குறித்து மோடி

1 mins read
960e28c7-4c37-4a28-ba23-cb9059de6ae9
புதுடெல்லியில் உள்ள வாக்களிப்பு நிலையத்துக்கு வெளியே தாயார் சோனியா காந்தியுடன் செல்ஃபி படம் எடுத்துக்கொள்ளும் ராகுல் காந்தி. - படம்: புளூம்பெர்க்

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சித் தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்திக்கும் ஆம் ஆத்மி கட்சித் தலைவரான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் பாகிஸ்தான் அளித்துவரும் ஆதரவு, “மிகுந்த கவலைக்குரியது” என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்துக்கு திங்கட்கிழமை (மே 27) அளித்த பேட்டியில், இந்த விவகாரம் குறித்து முழுமையாக விசாரணை நடத்த தாம் கோரியுள்ளதாகச் சொன்னார்.

“சில தரப்பினருக்கு, குறிப்பாக எங்களுக்கு எதிராக வெறுப்புணர்வைப் பரப்ப முற்படுவோருக்கு பாகிஸ்தானிடம் இருந்து ஆதரவு கிடைப்பது ஏன் என்பது எனக்குப் புரியவில்லை,” என்றார் திரு மோடி.

முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த ஃபவத் சௌத்ரி, பாரதிய ஜனதா கட்சியையும் பிரதமர் மோடியையும் ராகுல் காந்தி விமர்சிப்பதைக் காட்டும் காணொளி ஒன்றை சமூக ஊடகத்தில் பகிர்ந்தார். அதில், ராகுலைப் பாராட்டும் வாசகம் ஒன்றையும் அவர் பதிவிட்டார்.

இந்நிலையில், “இடைத்தரகர்களை அனுமதித்ததற்காக” காங்கிரஸ் கட்சியை திரு மோடி சாடினார்.

குறிப்புச் சொற்கள்