லக்னோ: பகுஜன் சமாஜ் கட்சியின் உயர் மட்ட கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. அந்தக் கூட்டத்தில் பேசிய மாயாவதி, கட்சியின் முக்கியப் பதவியில் இருந்த தனது சகோதரர் மகனான ஆகாஷ் ஆனந்தைக் கட்சியின் அனைத்து முக்கிய பொறுப்புகளில் இருந்தும், நீக்குவதாக அக்கட்சியின் தலைவர் மாயாவதி அறிவித்தார்.
மாயாவதியின் தம்பி ஆனந்த் குமாரின் மகனான ஆகாஷ் ஆனந்த், பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளராக இருந்து வந்தார். மேலும், தனது அரசியல் வாரிசாக ஆகாஷ் ஆனந்த்தை மாயாவதி அறிவித்திருந்தார்.
இந்நிலையில், தேசிய ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் இருந்தும், அரசியல் வாரிசு என்ற தகுதியில் இருந்தும் ஆகாஷ் ஆனந்த் நீக்கப்படுவதாக மாயாவதி ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார். இப்போது, தனக்கு அரசியல் வாரிசாக யாரும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதற்குக் காரணம், அவர் தொடர்ந்து அவரது மாமனார் அசோக் சித்தார்த் கூற்றின் படி நடந்துகொள்வது ஆகும். அசோக் சித்தார்த் முன்பே கட்சியில் இருந்து நீக்கப்பட்டு விட்டார்.
அத்துடன், தம்பி ஆனந்த் குமாரையும் கட்சியின் மூத்த தலைவர் ராம்ஜி கௌதமையும் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர்களாக மாயாவதி அறிவித்தார். அவரது இந்தத் திடீர் அறிவிப்பு கட்சியினர் இடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.