புதுடெல்லி: பங்ளாதேஷில் தட்டம்மை நோய் பரவி வருகிறது. இதனால், அண்டை நாடான இந்தியாவுக்கு அந்நோய்த் தொற்று பரவும் வாய்ப்பு உள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
2026 ஜனவரி மாதத்தில் தொடங்கிய இந்தத் தொற்று, மார்ச், ஏப்ரல் மாதங்களில் பங்ளாதேஷின் பல பகுதிகளுக்கு மிக வேகமாகப் பரவி, அந்த நாட்டில் பெரும் சுகாதார நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. மொத்தமுள்ள 64 மாவட்டங்களில் 58 மாவட்டங்களில் (சுமார் 91%) இந்த நோய் பரவியுள்ளது.
மொத்தம் 19,161 பேருக்குத் தொற்றுப் பாதிப்பு இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் நிலையில், இதுவரையிலும் 2,973 பேருக்குத் தட்டம்மைத் தொற்று பாதித்திருப்பது மருத்துவ ஆய்வகங்கள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
டாக்கா , ராஜ்சாஹி , சட்டோகிராம், குல்னா ஆகிய பகுதிகளில் தொற்று எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. குறிப்பாக, டாக்காவில் உள்ள மக்கள் நெரிசல்மிக்க குடிசைப் பகுதிகளில் இதன் பரவல் தீவிரமாக உள்ளதாகத் தெரிகிறது.
தட்டம்மை நோய்க்கு வங்கதேசத்தில் இதுவரையிலும் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து விட்டனர். அது தொற்றுநோய் என்பதால் அண்டை நாடுகளுக்கும் அந்நாட்டுக்குச் சென்று வருவோர் மூலம் பரவக்கூடிய வாய்ப்பு உள்ளது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இது குறிப்பாக ஒரு வயதுக் குழந்தை முதல் 14 வயதுட்குட்பட்ட குழந்தைகளையே அதிகம் பாதிக்கும் என்று அந்த அமைப்பு கூறியுள்ளது.
உலகளவில் இளம் குழந்தைகளின் உயிரிழப்பிற்குக் காரணமான முக்கிய நோய்களில் தட்டம்மை நோயும் ஒன்றாகும்
இந்த நோய்த்தொற்று, பாதிக்கப்பட்டவரின் மூக்கு, வாய் அல்லது தொண்டையிலிருந்து வெளியேறும் நீர்த் துளிகள் மூலம் பரவுகிறது. தொற்று ஏற்பட்ட 10 நாட்களுக்குப் பிறகே தொற்றுப் பாதிப்புக்கான அறிகுறிகள் தோன்றும் என்று சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

