கண்ணூர்: இலாப நோக்கமற்ற விலங்குநல அமைப்பான பீட்டாவும் (PETA) நடிகை வேதிகாவும் சேர்ந்து, இந்தியாவின் கேரள மாநிலத்திலுள்ள ஒரு கோவிலுக்கு ‘இயந்திர’ யானையைப் பரிசாக வழங்கியுள்ளனர்.
கண்ணூரிலுள்ள இடையார் ஸ்ரீ வடக்கும்பாட் சிவா விஷ்ணு கோவிலுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ள அந்த யானை ‘வடக்கும்பாட் சங்கரநாராயணன்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
உயிருள்ள யானைகளை வைத்திருப்பதில்லை அல்லது வாடகைக்குப் பெறுவதில்லை என்ற கொள்கையுடன் அத்திருத்தலம் செயல்படுவதால், இயந்திர யானையை வழங்கியுள்ளதாக பீட்டா அமைப்பு தெரிவித்தது.
நவம்பர் 14ஆம் தேதி குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, குழந்தை நட்சத்திரம் ஸ்ரீபத் யான் அந்த இயந்திர யானையை அறிமுகம் செய்துவைத்தார்.
நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய நடிகை வேதிகா, உண்மையான யானைகளின் தேவையின்றி, பாதுகாப்பாகவும் பொறுப்புடனும் கோவில் சடங்குகளை நடத்த இந்தப் புதுமையான நடவடிக்கை உறுதிசெய்யும் என்றார்.
பீட்டா அமைப்பால் கேரளக் கோவிலுக்கு வழங்கப்பட்ட நான்காவது இயந்திர யானை இது என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, திருச்சூரிலுள்ள இரிஞ்ஞாடப்பிள்ளி ஸ்ரீ கிருஷ்ணா கோவில், கொச்சியிலுள்ள திரிக்கயில் மகாதேவ ஆலயம், திருவனந்தபுரத்திலுள்ள பௌர்ணமிகாவு கோவில் ஆகிய திருத்தலங்களுக்கு பீட்டா அமைப்பு இயந்திர யானையை நன்கொடையாக வழங்கியுள்ளது.

