புதுடெல்லி: உக்ரேன், ரஷ்யா இடையே கடந்த நான்கு ஆண்டுகளாக நீடிக்கும் போர் காரணமாக இந்திய மருத்துவர்களின் பார்வையும் தேர்வும் மாறிவிட்டன.
இந்திய மருத்துவ மாணவர்கள் பாதுகாப்பான மாற்று இடங்களைத் தேடிச் செல்லும் நிலையில், ஜார்ஜியா அவர்களுடைய புதிய, முதன்மைத் தேர்வாக மாறிவருகிறது.
எனவே, வேகமாக வளர்ந்து வரும் கல்வி மையமாக ஜார்ஜியா உருவெடுத்துள்ளதாக துறைசார் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், இந்திய ரிசர்வ் வங்கிகள் உள்ளிட்ட அண்மைய தரவுகளும் இதை உறுதி செய்வதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இது தொடர்பாக இந்திய தகவல் அறியும் உரிமைச் சட்டம் (ஆர்டிஐ) மூலம் பல்வேறு தகவல்கள் பெறப்பட்டுள்ளன.
இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) தாராளமயமாக்கப்பட்ட பணம் அனுப்பும் திட்டத்தின் (எல்ஆர்எஸ்) தரவுகளின்படி, ஜார்ஜியாவில் கல்விக்காக இந்திய மாணவர்களின் செலவிடும் மொத்த தொகை வேகமாக உயர்ந்து வருவதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
கடந்த 2018-19ஆம் நிதியாண்டில் மட்டும் இந்திய மாணவர்கள் மருத்துவக் கல்விக்காக 10.33 மில்லியன் டாலர் செலவிட்டுள்ளனர். அதே தொகை தற்போது ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது. அதாவது, 2024-25ஆம் நிதியாண்டில் இந்திய மாணவர்கள் செலவிட்டுள்ள தொகை $50.25 மில்லியன்.
ஆனால், இந்திய மருத்துவ மாணவர்களின் கவனத்தை ஈர்க்க ஜார்ஜியா அரசாங்கம் சிறப்பு நடவடிக்கை ஏதும் மேற்கொள்ளவில்லை. உக்ரேன் இழந்த வாய்ப்புகளால் இந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளது என்று தரவுகள் கூறுகின்றன.
கடந்த 2018-19 நிதியாண்டில் இந்திய மாணவர்களின் கல்விக்காக உக்ரேனுக்கு இந்தியர்கள் அனுப்பிய தொகை $14.80 மில்லியன். அந்தத் தொகையானது, 2024-25 நிதியாண்டில் கடும் வீழ்ச்சியடைந்து $2.40 மில்லியன் மட்டுமே அனுப்பப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
மருத்துவராக வேண்டும் என்று கடுமையாக உழைக்கும் இந்திய மாணவர்களுக்கு உகந்த கல்வி மையங்களில் ஒன்றாக உக்ரேன் கருதப்பட்டது. அதனால் ஏராளமான மாணவர்கள் அங்கு படிக்கச் சென்றனர்.
2021-22ல் உக்ரேனுக்கு கல்விக்காக அனுப்பப்பட்ட தொகை $39.12 மில்லியன் எனில், போர் தொடங்கிய பின்னர் இத்தொகை 2022-23ல் $10.6 மில்லியன் ஆகக் குறைந்துவிட்டது.
கல்விக்காகப் பணம் அனுப்பப்பட்ட வெளிநாடுகளின் பட்டியலில் ஜார்ஜியா 21வது இடத்தில் இருந்து 14வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.


