மருத்துவக் கட்டண விவரங்கள்: வெளிப்படையாகக் காட்சிப்படுத்த மாநில அரசுகளுக்கு உத்தரவு

மருத்துவக் கட்டண விவரங்கள்: வெளிப்படையாகக் காட்சிப்படுத்த மாநில அரசுகளுக்கு உத்தரவு

படம்: தி சௌத் இந்தியா டைம்ஸ்

14 Oct 2026 - 7:05 pm

1 mins read

புதுடெல்லி: இந்தியாவில் உள்ள அனைத்து மருத்துவமனைகளும் தங்களது சிகிச்சைக் கட்டண விவரங்களை வெளிப்படையாகக் காட்சிப்படுத்த வேண்டும் என மத்திய சுகாதார அமைச்சு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது தொடர்பாக சுகாதாரச் செயலாளர் புண்ய சலிலா ஸ்ரீவஸ்தவா, அனைத்து மாநில, யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு அவசரக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில், மருத்துவ நிறுவனங்கள் (பதிவு, ஒழுங்குமுறை) சட்டம் 2010, 2012ஆம் ஆண்டு விதிகளின்படி, மருத்துவமனைகள் வழங்கும் ஒவ்வொரு சேவைக்கான கட்டண விவரங்களையும் அங்குள்ள வசதிகளையும் பொதுமக்கள் எளிதில் காணும் வகையில் காட்சிப்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, இந்தக் கட்டணப் பட்டியல்கள் தமிழ் போன்ற உள்ளூர் மொழிகளிலும் ஆங்கிலத்திலும் இடம்பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

நோயாளிகளும் அவர்களது குடும்பத்தினரும் சிகிச்சைக் கட்டணங்களை முன்கூட்டியே அறிந்து, முறையான முடிவுகளை எடுக்கவும் கட்டணம் தொடர்பாக ஏற்படும் தேவையற்ற குழப்பங்கள், மோதல்களைத் தவிர்க்கவும் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், வெளிநாடுகளில் இருந்து சிகிச்சைக்காக வரும் நோயாளிகளுக்கும் இந்தக் கட்டண வெளிப்படைத்தன்மை பொருந்தும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அண்மையில் கர்நாடக அரசு, மருத்துவப் பட்டியல்களில் மருந்துகளின் இறக்குமதி விலை, அதிகபட்ச சில்லறை விலையை குறிப்பிட வேண்டும் என உத்தரவிட்டிருந்த நிலையில், தற்போது இந்திய அரசே நாடு முழுவதற்கும் இத்தகைய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்
மருத்துவம்கட்டணம்மருத்துவமனைமத்திய அரசுவெளிநாடுசிகிச்சை