தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மீனாட்சி திருக்கல்யாணம்; பக்தர்களை குலுக்கல் முறையில் அனுமதிக்க கோரிக்கை

2 mins read
8edc20db-c993-451b-b26d-f245b66cbcb0
மீனாட்சி திருக்கல்யாணம் நுழைவுச்சீட்டை குலுக்கல் முறையில் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. - கோப்புப் படம்: ஊடகம்

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தை காண இணையத் தளம் வழியாக ஆயிரக்கணக்கானோர் முன்பதிவு செய்துள்ளனர்.

இதையடுத்து வெளிப்படைத் தன்மையுடன் பக்தர்கள் முன்னிலையில் குலுக்கல் நடைபெற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி திருக்கல்யாணம் இம்மாதம் 8ஆம் தேதி காலை நடக்கிறது. இதற்காக ஏப்ரல் 29 முதல் வெள்ளிக்கிழமை (மே 2) இரவு 9:00 மணிவரை இணையத்தளத்தில் முன்பதிவு நடந்தது.

கோயில் ஆடிவீதியில் சில ஆயிரம் பக்தர்களை மட்டுமே அனுமதிக்க முடியும் என்பதால், அதைக் கணக்கிட்டு முன்பதிவு செய்தவர்களில் கணினி மூலம் குலுக்கல் முறையில் தேர்வு செய்து சம்பந்தப்பட்டோருக்கு சனிக்கிழமை (மே 3) குறுந்தகவல், மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவிக்கப்படும்.

அதை மேலசித்திரை வீதியில் உள்ள பிர்லா மந்திரில் மே 4 முதல் 6 வரை காண்பித்து ரூ.500, ரூ.200 செலுத்தி நுழைவுச் சீட்டைப் பெற வேண்டும்.

கடந்த சில ஆண்டுகளாக இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது. கடந்தாண்டு முன்பதிவு செய்தவர்களில் பலருக்கு நுழைவுச்சீட்டு கிடைக்கவில்லை. மறைமுகமாக குலுக்கல் நடைபெறுவதால் இதில் முறைகேடு நடந்திருக்கலாம் எ குற்றச்சாட்டு எழுந்தது.

இதைத் தவிர்க்க பொறியியல் கல்லுாரிகளுக்கு கவுன்சிலிங் நடக்கும்போது எல்லோர் முன்னிலையில் ‘ரேண்டம்’ எண் குலுக்கல் வெளிப்படையாக நடத்துவது போல் பக்தர்கள் முன்னிலையில் குலுக்கல் நடத்தி தேர்வு செய்வதே சிறந்த வழி என்று சிலர் கருதுகின்றனர்.

“இணையத்தளத்தில் முன்பதிவு செய்தபோது ஆதாரின் உண்மை தன்மையை அறிய ‘ஓடிபி’ அனுப்பப்பட்டது. அதைத் தொடர்ந்து முன்பதிவுக்கும் ‘ஓடிபி’ அனுப்பப்பட்டது. இதற்கு பல நிமிடங்கள் செலவிட வேண்டியிருந்தது. அம்மன் திருக்கல்யாணத்தை காண காத்திருப்பதைவிட இது பெரிதாக தெரியவில்லை. திருக்கல்யாணத்தை இலவசமாகக் காண வருவோரை முதலில் வருவோருக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் கோயிலுக்குள் அனுமதிக்க உள்ளனர். அதேபோல் முதலில் முன்பதிவு செய்பவருக்கே முன்னுரிமை என்று அறிவித்து, முன்பதிவு செய்ததும் இணையத்தளத்தில் கட்டணம் செலுத்தியவர்களுக்கு பிரத்யேக எண், அடையா குறிப்பும் வழங்கினாலே போதும். குறிப்பிட்ட எண்ணிக்கை முடிந்ததும் பதிவு முடிந்துவிட்டது என அறிவிக்கலாம். இதன்மூலம் கால விரயமும், அலைச்சலும் குறையும். இதுகுறித்து கோயில் நிர்வாகமும், அறநிலையத்துறையும் பரிசீலிக்க வேண்டும்,” என்று பக்தல் ஒருவர் தெரிவித்ததாக தினமலர் நாளேடு தகவல் வெளியிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்