ஷில்லாங்: நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் சிக்கி, 18 தொழிலாளர்கள் மாண்ட சம்பவம் மேகாலயாவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அங்குள்ள ஜெயந்தியா மலைப்பகுதியில் டஷ்காய் என்ற இடத்தில் நிலக்கரிச் சுரங்கம் ஒன்று இயங்கி வருகிறது.
வியாழக்கிழமை (பிப்ரவரி 5) காலை தொழிலாளர்கள் வழக்கம்போல் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பலத்த வெடிச்சத்தம் கேட்க, தொழிலாளர்கள் அச்சத்தில் அலறியடித்துக்கொண்டு ஓட்டம்பிடித்தனர்.
எனினும், இடிபாடுகளில் சிக்கி 18 தொழிலாளர்கள் மாண்டுபோயினர். தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புப் படையினரும் காவல்துறையினரும் உடனடியாக மீட்புப் பணிகளை மேற்கொண்டனர்.
சுரங்கப் பணிக்காக மொத்தமாக வைக்கப்பட்டிருந்த வெடிப்பொருள்கள் வெடித்து இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணை தெரிவிக்கிறது.
இந்தச் சுரங்கம் செயல்பட தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தடை விதித்திருந்தும் அதை மீறி சட்டவிரோதமாக இயங்கி வந்ததும் அம்பலமாகி உள்ளதால் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அக்குறிப்பிட்ட சுரங்கம், எலிப்பொந்தைப் போல் மிகக் குறுகலாக இருந்ததாகவும் வெடிபொருள்களை வெடிக்கச் செய்து அந்தக் குறுகலான பாதையை அகலப்படுத்தி, நிலக்கரியை எடுக்கும் பணியை தொழிலாளர்கள் மேற்கொண்டதாகவும் காவல் கண்காணிப்பாளர் பிரகாஷ் குமார் தெரிவித்தார்.
இது ஆபத்தான செயல்முறை என்றும் குறிப்பிட்ட அவர், இதுவரை 18 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது என்றும் செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.
விபத்தில் படுகாயம் அடைந்த ஒருவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதை உறுதிசெய்த அவர், நிலக்கரி உரிமையாளர் யார் என்பதும், அதை நிர்வகிப்பது யார் என்பதும் தெரியவில்லை என்றார்.
எனவே, அடையாளம் தெரியாத நபர்கள் என்று குறிப்பிட்டு, வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இதனிடையே, இந்த விபத்துக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மேகாலய முதல்வர் கோன்ராட் சங்மா கூறியுள்ளார்.
மேலும் மீட்பு, நிவாரப் பணிகளை வேகப்படுத்த இரண்டு அமைச்சர்களுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
திடீர் வெடி விபத்தில் உயிரிழந்தவர்களில் பலர் அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இந்த புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதனிடையே, இந்தச் சம்வத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
இறந்தவர்களின் குடும்பத்தாருக்கு 2 லட்ச ரூபாயும் காயமடைந்தோருக்கு 50,000 ரூபாயும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என அவர் அறிவித்துள்ளார்.

