மேகாலயா கொலை வழக்கு: ஆதாரங்களை அழித்ததற்காக இந்தூர் சொத்து வியாபாரி கைது

2 mins read
8fe1a3a9-ef9d-46dc-8f61-79003b10c861
சோனம், ராஜா ரகுவன்ஷி. - படம்: பிடிஐ

இந்தூர்: மேகாலயா தேனிலவு கொலை வழக்கு தொடர்பில், ஆதாரங்களை அழித்ததற்காக இந்தூர் காவலர்கள் ஷிலோம் ஜேம்ஸ் என்ற சொத்து வியாபாரியை ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 22) கைது செய்ததாகக் கூடுதல் துணை காவல் ஆணையர் ராஜேஷ் தண்டோதியா பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

கொலையின் முக்கிய குற்றவாளியான சோனத்தின் கறுப்புப் பையை ஜேம்ஸ் அப்புறப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

அந்தப் பையில் ரூ.5 லட்சம் ரொக்கப் பணம், அவரது நகைகள், ஒரு நாட்டுத் துப்பாக்கி மற்றும் அவரது உடைகள் இருந்தன. அனைத்துப் பொருள்களும் விசாரணையுடன் தொடர்புடையவை என்று இந்தியா டுடே தொலைக்காட்சியிடம் காவலர்கள் தெரிவித்தனர்.

இந்தூரில் சொத்து மேலாண்மை நிறுவனத்தை நடத்தும் ஜேம்ஸ், கொலையில் தொடர்புடைய விஷால் சௌகானுக்கு தனது வீட்டை வாடகைக்கு விட்டதாகக் காவலர்கள் தெரிவித்தனர்.

மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரைச் சேர்ந்த ராஜா ரகுவன்ஷி - சோனம் தம்பதியர் திருமணமாகி 10 நாள்களில் மேகாலயாவுக்கு தேனிலவுக்குச் சென்றனர்.

அப்போது, சோனம் தனது காதலன் ராஜ் குஷ்வாஹா மற்றும் கூலிப்படையுடன் இணைந்து ராஜா ரகுவன்ஷியை கொலை செய்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. ஜூன் 2 ஆம் தேதி ராஜாவின் சிதைந்த சடலம் மீட்கப்பட்டது.

ராஜ் குஷ்வாஹாவின் ஏற்பாட்டில், மேகாலயாவுக்குச் சென்ற கூலிப்படையைச் சேர்ந்த மூவர் ராஜா ரகுவன்ஷியைக் கொலை செய்துள்ளனர்.

சம்பவத்தின்போது சோனமும் உடன் இருந்துள்ளார்.

சோனத்தை உத்தரப் பிரதேசத்திலும் அவரது காதலர் மற்றும் கூலிப்படையைச் சேர்ந்தவர்களை மத்தியப் பிரதேசத்திலும் மேகாலயா காவலர்கள் கைது செய்தனர்.

இதனிடையே, ராஜா ரகுவன்ஷி கொலை வழக்கில் சோனத்தையும் அவரது காதலன் ராஜையும் 13 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க உள்ளூர் நீதிமன்றம் சனிக்கிழமை உத்தரவிட்டது.

சோனம், ராஜ் ஆகிய இருவரின் காவல் சனிக்கிழமையுடன் முடிவடைந்தது. வழக்கை விசாரிக்கும் சிறப்புப் புலனாய்வுக் குழு காவல் நீட்டிப்பைக் கோரவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்
காவலர்கள்மேகாலயாகைது