புதுடெல்லி: பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக்கொள்ளாது என இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
‘குவாட்’ அமைப்பில் உள்ள உறுப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் புதுடெல்லியில் செவ்வாய்க்கிழமை (மே 26) நடைபெற்றது. இதில் பல முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டன.
இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் பென்னி வோங், ஜப்பான் வெளியுறவு அமைச்சர் தோஷிமிட்சு மொட்டேகி, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ ஆகியோர் பங்கேற்றனர்.
உலகில் தற்போது நிலவும் பல்வேறு சவால்கள், வாய்ப்புகளைக் ‘குவாட்’ அமைப்பு கவனத்தில் கொள்ளும் என்றும் இந்தோ-பசிபிக் வட்டாரத்தின் மீதான பார்வை தெளிவாக இருக்கும் என்றும் கூட்டத்தை தொடங்கி வைத்துப் பேசிய அமைச்சர் ஜெய்சங்கர் குறிப்பிட்டார்.
அவ்வட்டாரத்தில் அரசியல், பாதுகாப்பு பதற்றங்கள் அதிகரித்து வரும் வேளையில் குவாட் அமைப்பின் கூட்டம் நடைபெறுவதை திரு ஜெய்சங்கர் சுட்டிக்காட்டினார்.
உலக அளவில் விநியோகச் சங்கிலி மீள்திறன், உற்பத்தி, வளக் குவிப்புகள், முக்கிய உள்கட்டமைப்பில் உள்ள இடைவெளிகள் போன்ற பிரச்சினைகள் குறித்து இக்கூட்டத்தில் விரிவான விவாதங்கள் நடைபெற்றதாக ஊடகச் செய்திகள் தெரிவித்தன.
உலக வர்த்தகத்தில் 60% இந்தோ-பசிபிக் வழியாகவே நடைபெறுவதாக திரு மார்கோ ரூபியோ குறிப்பிட்டார்.
குவாட் பேச்சுவார்த்தைகள் மிகவும் பயனுள்ளவை என்று தெரிவித்த அவர், அந்த அமைப்பு உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கைப் பிரதிநிதிப்பதாகக் கூறினார். எனவே அப்பகுதியில் நிலைத்தன்மை தேவை எனவும் அவர் வலியுறுத்தினார்.
தொடர்புடைய செய்திகள்
கடலோரக் காவல்படையினரை ஒரே தளத்தில் ஒன்றிணைக்கும் புதிய முயற்சியை குவாட் தொடங்க உள்ளது. இது தொடர்பாக அதன் உறுப்பு நாடுகள் திடமான முடிவுகளை எட்டியுள்ளதாக திரு ரூபியோ தெரிவித்தார்.
கடந்த ஆண்டு குவாட் உச்ச நிலை இந்தியாவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பல்வேறு நாடுகளுக்கான இறக்குமதி வரிகளை வாஷிங்டன் உயர்த்தியது உள்ளிட்ட சில காரணங்களால் மாநாடு நடைபெறவில்லை.
“குவாட் அமைப்பானது, ஒத்த எண்ணம் கொண்ட நாடுகள் பங்கேற்கும் கூட்டங்களை நடத்துவதற்கான அமைப்பாக மட்டுமே இருப்பதை நாங்கள் விரும்பவில்லை,” என்றார் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ.
அது, கூட்டாகச் செயல்படும் ஒரு மன்றமாக அமைய வேண்டும் என விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
மத்திய கிழக்குப் பகுதியில் நிலவும் மோதல், அது கப்பல் போக்குவரத்து வழித்தடங்களையும் எரிசக்தி விநியோகத்தையும் எவ்வாறு பாதிக்கிறது ஆகியவை குவாட் கூட்டத்தின் முக்கிய விவாதப்பொருளாக இருந்ததாக நியூஸ் 18 ஊடகம் தெரிவித்தது.
ஹோர்முஸ் நீரிணை மூடப்படக்கூடும் என்பது குறித்தும் அது இந்தோ-பசிபிக் வட்டாரத்திலும் முக்கிய உலகளாவிய வர்த்தக வழித்தடங்களிலும் எவ்வாறு போக்குவரத்தை சீர்குலைக்கும் என்பது குறித்தும் குவாட் உறுப்பு நாடுகள் கவலை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
ஈரான் நெருக்கடி இந்தோ-பசிபிக் பகுதியில் ‘மிகப்பெரிய தாக்கத்தை’ ஏற்படுத்துவதாக ஜப்பான் கவலை தெரிவித்தது.

