கோல்கத்தா: மேற்கு வங்காள மாநிலத்தில் நிகழ்த்தப்பட்ட இணைய வங்கி மோசடியில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் 55 லட்சம் ரூபாய் பறிபோனது.
திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கல்யாண் பானர்ஜி என்பவர் செராம்பூர் மக்களவைத் தொகுதி உறுப்பினராக உள்ளார். இதற்கு முன்னர் மூன்று முறை மக்களவை உறுப்பினராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் அவர் பதவி வகித்துள்ளார்.
அவர் கோல்கத்தா எஸ்பிஐ வங்கியின் (SBI) உயர் நீதிமன்றக் கிளையில் கணக்கு வைத்துள்ளார்.
கடந்த 2001ஆம் ஆண்டு முதல் 2006ஆம் ஆண்டு வரை மேற்கு வங்க சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது அதற்கான சம்பளத்தை வரவு வைக்க அந்தக் கணக்கை அவர் பயன்படுத்தினார்.
அதன் பின்னர், அந்த வங்கிக் கணக்கை அவர் பயன்படுத்தாமல் இருந்தார். அதனால், அந்தக் கணக்கில் இருந்த தொகை பயன்படாமல் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், அந்தக் கணக்கில் இருந்த 55 லட்சம் ரூபாய் திடீரென்று மாயமாகிவிட்டதாக வங்கி மேலாளர் கடந்த வெள்ளிக்கிழமை (நவம்பர் 6) கல்யாண் பானர்ஜியிடம் தொலைபேசி வழி தெரிவித்தார்.
பின்னர் அந்தச் சம்பவம் தொடர்பில் கோல்கத்தா காவல்துறையின் இணையக் குற்ற விசாரணைப் பிரிவில் வங்கி மேலாளர் புகார் செய்தார்.
அதனைத் தொடர்ந்து, காவல்துறையும் வங்கியும் தனித்தனியாக விசாரணை நடத்தின.
தொடர்புடைய செய்திகள்
அவரது கைப்பேசி எண், ஆதார் மற்று பான் எண்களை மோசடிக்காரர்கள் பயன்படுத்தி, பணத்தைச் சுருட்டியதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கல்யாண் பானர்ஜியின் காலிகட் கிளை எஸ்பிஐ (SBI) வங்கிக் கணக்கில் இருந்து 55 லட்சம் ரூபாய் பல ஆண்டுகளாகச் செயல்படாத கணக்கிற்கு மாற்றப்பட்டது. பின்னர் அந்தக் கணக்கில் இருந்து 55 லட்சம் ரூபாய் திருடப்பட்டுவிட்டது.
அந்த இணைய நிதி மோசடியில் தொடர்புடைய மர்ம நபர்கள் இன்னும் காவல்துறையிடம் சிக்கவில்லை. அவர்கள் தீவிரமாகத் தேடப்பட்டு வருவதாக அதிகாரிகள் கூறினர்.
காவல்துறையினர் முழுமையாக விசாரணை நடத்தி குற்றவாளிகளைப் பிடித்து தமது பணத்தைப் பெற்றுத் தருவார்கள் என்று கல்யாண் பானர்ஜி நம்பிக்கையுடன் இருப்பதாக அவருக்கு நெருக்கமான திரிணாமூல் காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் கூறினார்.
இருப்பினும், அந்தச் சம்பவம் பற்றி கல்யாண் பானர்ஜி ஊடகங்களிடம் எந்தக் கருத்தையும் பகிர்ந்துகொள்ளவில்லை.

