இளம் வயதில் உயிரிழக்கும் ஆண்கள்: தமிழகப் பொது சுகாதாரத்துறை அறிக்கை

இளம் வயதில் உயிரிழக்கும் ஆண்கள்: தமிழகப் பொது சுகாதாரத்துறை அறிக்கை

சித்திரிப்புப் படம்: இந்தியா டுடே

29 Sep 2026 - 7:05 pm

2 mins read

சென்னை: தமிழகத்தில் பெண்களைவிட அதிகமான ஆண்கள் இளம் வயதிலேயே உயிரிழந்து வரும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

பொது சுகாதாரத் துறை வெளியிட்ட மருத்துவ ஆய்வறிக்கையில், 2018 முதல் 2022 வரையிலான குடிமைப் பதிவு முறைத் தரவுகள் பகுப்பாய்வு செய்யப்பட்டன.

அந்த ஆய்வறிக்கை, மாநிலத்தின் சுகாதாரப் பொருளியல் சூழலில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

கடந்த 2025ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட தரவுகளின்படி, தமிழகத்தில் மொத்தம் 4,01,860 ஆண்களும் 2,91,347 பெண்களும் உயிரிழந்துவிட்டனர். அதாவது, பெண்களைவிட 1,10,513 ஆண்கள் அதிகமாக இறந்துள்ளனர்.

இந்த ஏற்றத்தாழ்வு குறிப்பிட்ட ஆண்டில் மட்டும் நிகழ்ந்ததல்ல என்பதும் கடந்த மூன்று ஆண்டுகளாகவே இந்நிலை தொடர்கிறது என்பதும் கவனிக்கத்தக்கது.

கல்லூரி உயர்கல்வி, வேலைவாய்ப்பு, திருமணம் என வாழ்க்கையின் மிக முக்கியமான கட்டத்தில் இருக்கும் 15 முதல் 34 வயதுக்குட்பட்ட 26,302 ஆண்கள் கடந்த ஆண்டில் மாண்டுபோயினர். அதே வயதில் இறந்த பெண்களின் எண்ணிக்கை 10,638 என அறிக்கை தெரிவிக்கிறது.

35 முதல் 54 வயதுக்குட்பட்ட குடும்பப் பொறுப்புகளைச் சுமக்கும் நடுத்தர வயதில் 86,328 ஆண்களும் 37,675 பெண்களும் மாண்டுவிட்டனர்.

ஐரோப்பிய நாடான ஸ்வீடனில் 65 வயதுக்கு முன்பாக உயிரிழப்போர் எண்ணிக்கை வெறும் பத்து விழுக்காடாக இருக்கும் சூழலில், தமிழ்நாட்டில் 65 வயதுக்கு முன்பே 42 விழுக்காட்டினர் உயிரிழந்திருப்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஆண்களின் இந்த அகால மரணங்களுக்கு சாலை விபத்துகள், உயிர்மாய்ப்பு, புகையிலை, மதுப்பழக்கம் ஆகியவை முக்கியக் காரணங்களாக அமைகின்றன.

மேலும், ரத்த அழுத்தம், நீரிழிவு, இதய நோய்கள், சிறுநீரகப் பிரச்சினைகளை தொடக்கத்திலேயே கண்டறியத் தவறுவதும் உயிரிழப்பை அதிகரிக்கிறது.

மற்றொரு கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், 2025ல் பதிவான மொத்த இறப்புகளில் 41 விழுக்காடு மட்டுமே மருத்துவ ரீதியாகச் சான்றளிக்கப்பட்ட காரணங்களைக் கொண்டுள்ளன.

பெரும்பான்மையான மரணங்களுக்குத் துல்லியமான மருத்துவக் காரணம் பதிவு செய்யப்படாதது மிகப்பெரிய தரவு இடைவெளியை ஏற்படுத்துகிறது.

அன்புமணி வலியுறுத்து

இதனிடையே, தமிழகத்தில் ஆண்களின் உயிரிழப்பு அதிகரிப்பதற்கான உண்மையான காரணங்களை அதிகாரபூர்வமாக உறுதி செய்ய, மதுவினால் ஏற்படும் கேடுகள் குறித்து தமிழக அரசு உடனடியாக சிறப்பு ஆய்வு நடத்த வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்
ஆண்பெண்கள்இறப்பு விகிதம்தமிழ்நாடுசுகாதார அமைச்சுஉயிரிழப்பு