பெங்களூரு: கர்நாடகப் பெண்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றிருந்த ஓர் அறிவிப்புக்கு அம்மாநில உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
பெண் ஊழியர்களுக்கு மாதந்தோறும் ஒருநாள் முழு ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு வழங்குவதைக் கட்டாயமாக்கும் அறிவிப்பை கர்நாடக அரசு அண்மையில் அறிவித்தது. இதற்குப் பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், பெங்களூரைச் சேர்ந்த சில அமைப்புகள் இரு தனித்தனி மனுக்களை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தன. அவற்றை விசாரித்த நீதிபதி ஜோதி, அரசு உத்தரவுக்கு இடைக்காலத் தடையைப் பிறப்பித்தார்.
மேலும், மாதவிடாய் விடுப்புக் கொள்கை மூலம் கூடுதல் விடுப்பு வழங்க மனுதாரரிடமோ அல்லது சம்பந்தப்பட்ட நிறுவனமுடனோ எந்த ஆலோசனையும் நடத்தவில்லை எனக் கூறப்பட்டது.
எனவே, மாதவிடாய்ச் சுழற்சியின்போது விடுப்பு வழங்க வேண்டும் எனத் தொழிலாளர்கள் நலன் தொடர்பான எந்தத் தனிச் சட்டமும் இல்லை என்று சுட்டிக்காட்டிய நீதிபதி, தொழிலாளர்கள் சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்ட பல்வேறு நிறுவனங்களுக்கு ஒரே அறிவிப்பின்மூலம் கூடுதல் விடுப்பை அறிமுகப்படுத்த அரசுக்கு அதிகாரமில்லை என்றும் சொன்னார்.

