தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கர்நாடகத்தில் பெண்களுக்கு மாதந்தோறும் ஒரு நாள் மாதவிடாய் விடுப்பு

2 mins read
b72ad5dc-b633-490e-a19c-5e10d3555793
பெண்கள் மாதவிடாய்க் காலத்திற்கு ஏற்ப, மாதத்திற்கு ஒரு நாளை அல்லது ஒரே நேரத்தில் மொத்தமாக 12 நாள்களை விடுப்பாக எடுத்துக்கொள்ளலாம்.  - படம்: இந்தியா டுடே

பெங்களூரு: கர்நாடக அரசாங்கம் பெண்களுக்கு மாதந்தோறும் ஒரு நாள் மாதவிடாய் விடுப்புக் கொடுக்கப்போவதாக அறிவித்துள்ளது. பெண் ஊழியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு மாதவிடாய் விடுப்புக் கொள்கையை ஏற்றுக்கொண்டதாக அது சொன்னது. வேலையிடத்தில் அனைவரையும் அரவணைக்கும் நோக்கத்துடனும் ஊதியத்துடன் கூடிய அந்த விடுப்புத் தரப்படுவதாக மாநில அரசாங்கம் தெரிவித்தது.

புதிய கொள்கையின்படி, மகளிர் மாதவிடாய்க் காலத்தின்போது மாதம் ஒரு முறை விடுப்பு எடுத்துக்கொள்ளலாம். மாநிலத்தில் உள்ள அரசாங்க அலுவலகங்கள், நெசவுத் தொழில்துறைகள், பன்னாட்டு நிறுவனங்கள், தகவல்தொழில்நுட்ப நிறுவனங்கள், மற்ற தனியார் நிறுவனங்கள் என அனைத்துக்கும் அது பொருந்தும்.

முதன்முதலில் சென்ற ஆண்டு (2024) கொள்கை முன்வைக்கப்பட்டது. அப்போது ஆண்டுக்கு ஆறு நாள்கள் மாதவிடாய் விடுப்பு வழங்குவதற்குக் கோரிக்கை விடுக்கப்பட்டது. இப்போது அந்த விடுப்பு ஆண்டுக்கு 12 நாள்கள் என மேம்படுத்தப்பட்டுள்ளது.

கர்நாடக முதலமைச்சர் சித்​த​ராமையா தலை​மை​யில் வியாழக்​கிழமை (அக்டோபர் 9) நடைபெற்ற அமைச்​சர​வைக் கூட்​டத்​தில் திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

பெண்களின் நலனையும் அவர்கள் ஆற்றும் பங்கையும் கவனத்தில் கொண்டு அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம் அது என்று மாநிலத்தின் தொழில் அமைச்சர் சந்தோ‌‌ஷ் லாட் கூறினார்.

“திட்டம் உடனடியாக நடப்புக்கு வருகிறது. பெண்கள் மாதவிடாய்க் காலத்திற்கு ஏற்ப, மாதத்திற்கு ஒரு நாள் விடுப்பு எடுத்துக்கொள்ளலாம். அல்லது ஒரே நேரத்தில் 12 நாள்களை மொத்தமாகவும் எடுத்துக்கொள்ளலாம். முன்னேற்றத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு இது முத்தாய்ப்பாக அமைகிறது,” என்றார் அவர்.

கர்நாடகத்தில் அறிவிக்கப்பட்ட மாதவிடாய் விடுப்புக் கொள்கைபற்றி இந்தியா முழுதும் மற்ற மாநிலங்களிலும் பேசப்படுகிறது. கேரள மாநிலத்தில் தொழில்துறைப் பயிற்சி நிலையங்களில் பயிலும் பெண்களுக்கு மாதந்தோறும் இரண்டு நாள்கள் மாதவிடாய் விடுப்பு விடப்படுகிறது. பீகாரிலும் ஒடி‌சாவிலும் மாநில அரசாங்கத்தில் வேலை செய்யும் பெண் ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் 12 நாள்கள் மாதவிடாய் விடுப்புக் கொடுக்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்