கோல்கத்தா: காற்பந்து நட்சத்திரம் லயனல் மெஸ்ஸி இந்தியாவுக்கு நான்கு நாள் பயணம் மேற்கொண்டுள்ளார். சில இடங்களில் அவர் கண்காட்சிப் போட்டிகளில் விளையாடவும் உள்ளார்.
இந்நிலையில் சனிக்கிழமை (டிசம்பர் 13) கோல்கத்தாவின் ‘சால்ட் லேக்’ விளையாட்டரங்கில் குவிந்திருந்த பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் மெஸ்ஸி காட்சியளித்தார்.
ஆரவாரத்துடன் காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமளிக்கும் விதமாக மெஸ்ஸி விளையாட்டரங்கில் 20 நிமிடங்கள் மட்டுமே இருந்தார்.
இதனால் கோபமடைந்த ரசிகர்கள் விளையாட்டரங்கைச் சேதப்படுத்தினர். விளையாட்டரங்கில் இருந்த இருக்கைகளை உடைத்தனர். ஆடுகளத்திற்குள் நுழைந்து மேடையை உடைத்தனர்.
சம்பவம்குறித்த காணொளிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளன.
“மெஸ்ஸியை சுற்றி அரசியல் தலைவர்களும் திரைப் பிரபலங்கள் மட்டுமே இருந்தனர். 130 வெள்ளி கொடுத்து நுழைவுச்சீட்டு வாங்கிய எங்களுக்கு ஏமாற்றமே மிச்சம்,” என்று ரசிகர்கள் கூறினர்.

