ஜாம்நகர்: மெட்டா நிறுவனம் இந்தியாவில் தனது முதலாவது செயற்கை நுண்ணறிவுத் தரவு மையத்தை அமைப்பதற்காக ரிலையன்ஸ் குழுமத்துடன் கைகோத்துள்ளது.
உலகளவில் தொழில்நுட்ப உள்கட்டமைப்பில் முதலீடுகள் குவிந்துவரும் வேளையில் இந்த முக்கிய உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
இதன்படி, குஜராத் மாநிலம் ஜாம்நகரில் உள்ள தனது வளாகத்தில் 168 மெகாவாட் திறன் கொண்ட பிரம்மாண்ட தரவு மையம் ஒன்றை முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் கட்டமைக்கவுள்ளது.
இந்த மையத்தை மெட்டா நிறுவனம் குத்தகைக்கு எடுத்து இயக்கவுள்ளதாக புதன்கிழமையன்று (ஜூன் 10) வெளியிடப்பட்ட அதிகாரபூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலப்போக்கில் இந்த மையத்தை மேலும் விரிவாக்கம் செய்யும் வசதியும் அதில் சேர்க்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளுக்கு இணையாக உள்நாட்டிலேயே செயற்கை நுண்ணறிவுச் சேவைகளை மேம்படுத்த வேண்டும் என்ற இந்திய அரசாங்கத்தின் தொலைநோக்குப் பார்வைக்கு இத்தகைய தரவு மையங்கள் மிக அவசியமான உள்கட்டமைப்பாகக் கருதப்படுகின்றன. இந்தியாவில் தொழில்நுட்பத் துறைக்கான முதலீடுகள் அதிகரித்து வருவதை இந்த நடவடிக்கை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
மெட்டா - ரிலையன்ஸ் இடையிலான இந்தப் புதிய பங்காளித்துவம், இரு நிறுவனங்களுக்கும் இடையே நிலவி வரும் வர்த்தக உறவை மேலும் வலுப்படுத்தியுள்ளது. இதற்கு முன்னதாக, 2020ஆம் ஆண்டில் ரிலையன்ஸ் குழுமத்தின் தொலைத்தொடர்பு, தொழில்நுட்பப் பிரிவான ஜியோ பிளாட்ஃபார்ம்சில் மெட்டா நிறுவனம் 5.7 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஜாம்நகரில் அமையவுள்ள இந்த உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு வசதி, தங்களது உலகளாவிய ‘ஏஐ’ கட்டமைப்பை விரிவுபடுத்த உதவுவதுடன், இந்தியப் பொருளியலில் தங்களது நீண்டகால முதலீட்டை மேலும் வலுப்படுத்தும் என்று மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஸக்கர்பெர்க் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

