வதோதரா: நூறு நாள் வேலைத் திட்டம் எனப் பொதுவாக அழைக்கப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தின்கீழ் 75 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டதன் தொடர்பில் குஜராத் மாநில அமைச்சர் பாச்சூ காபட்டின் மகன் பல்வந்த்சிங் காபட்டை அம்மாநிலக் காவல்துறை சனிக்கிழமை (மே 17) கைதுசெய்துள்ளது.
பல்வந்த்சிங்கும் அவருடைய தம்பி கிரணும் சில நாள்களுக்குமுன் தங்களது முன்பிணை மனுவைத் திரும்பப் பெற்றுக்கொண்ட நிலையில், இக்கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
முதற்கட்ட விசாரணையில், நூறு நாள் வேலைத் திட்ட மோசடியில் பல்வந்த்சிங்கிற்குத் தொடர்பு இருப்பது தெரியவந்ததை அடுத்து, அவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக டாகோட் மாவட்டக் காவல்துறைத் துணைக் கண்காணிப்பாளரைச் சுட்டி ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது.
இவ்வழக்குத் தொடர்பில் டாகோட் காவல்துறை ஏற்கெனவே ஐவரைக் கைதுசெய்துள்ளது.
பாச்சு காபட் குஜராத் மாநிலத்தின் ஊராட்சி, வேளாண் துறைகளுக்கான அமைச்சராக இருக்கிறார்.
இந்நிலையில், நூறு நாள் வேலைத் திட்ட மோசடி குறித்து விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட வேண்டும் என்று குஜராத் காங்கிரஸ் கட்சித் தலைவர்களில் ஒருவரான அமித் சாவ்டா கோரிக்கை விடுத்துள்ளார்.

