அமராவதி: ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் அதிமுகவின் 53வதுஆண்டு விழாவுக்கு வாழ்த்துத் தெரிவித்து சமூக ஊடகங்களில் தமது கருத்துகளைப் பதிவேற்றி உள்ளார்.
அதில், “எம்ஜி. ராமசந்திரன் எனும் எம்ஜிஆர் அதிமுக எனும் கட்சியை நிறுவி, தமிழக அரசியலில் தோல்வியையே சந்திக்காத வரலாற்றைப் படைத்தவர். பல ஏழை, எளியவர்களுக்கு வாழ்வளித்தவர்.
“அவரது ஆட்சியில் சமூக நலனும் மாநிலத்தின் வளர்ச்சியும் ஒன்று சேர்ந்து நடந்தது. தமிழ்நாட்டை அனைத்துத் துறைகளிலும் நாட்டிலேயே முதன்மை மாநிலமாக விளங்கச் செய்தார் எம்ஜிஆர்.
“மக்களுக்கு அடிப்படை வசதிகளை உருவாக்கிக் கொடுத்ததுடன், தொலைநோக்குப் பார்வையுடன் பல்வேறு திட்டங்களுக்கு அடித்தளம் அமைத்தவர் அவர்.
“அப்படிப்பட்ட எம்ஜிஆரின் மக்கள் நலத் திட்டங்கள், அரசியல் வியூகத்தைக் கண்டு எனது அரசியல் வாழ்க்கைக்கு முன்மாதிரியாக அவரை ஏற்றுக்கொண்டேன்.
“தற்போது பழனிசாமியின் தலைமையில் இயங்கும் அதிமுக எம்ஜிஆர், ஜெயலலிதா கண்ட கனவுகளை நிறைவேற்ற வேண்டும். மக்களின் குரலாக அக்கட்சி தமிழகத்தில் ஒலிக்க வேண்டும்,” என்று பவன் கல்யாண் குறிப்பிட்டுள்ளார்.