புதுடெல்லி: தமிழ்நாட்டுக்கு வரவிருந்த பகுதி மின்கடத்தி நுண் சில்லு ஆலை குஜராத்திற்குச் சென்றுவிட்டதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்து உள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “மோடி அரசு நான்கு பகுதி மின்கடத்தி நுண்சில்லு உற்பத்தித் திட்டங்களுக்கு பச்சைக்கொடி காட்டி உள்ளது.
“விரிவான செயல்திட்டத்திற்குப் பிறகு ஒரு முன்னணி தனியார் நிறுவனம் தெலுங்கானாவில் ஒரு திட்டத்திற்கான விண்ணப்பத்தைச் சமர்ப்பித்திருந்தது. இது ஆந்திராவிற்கு இடம்பெயர வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் அங்கீகரிக்கப்பட்டது.
“வெகு காலத்திற்கு முன்பே இதேபோன்ற இடமாற்றம் கட்டாயப்படுத்தப்பட்டது. பகுதி மின்கடத்தி உற்பத்தித் திட்டங்கள் அவற்றின் முன்மொழியப்பட்ட இடத்தை தெலுங்கானாவிலிருந்து குஜராத்திற்கு மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
“இதேபோல், தமிழ்நாட்டிற்காக திட்டமிடப்பட்ட மற்றொரு தொழிற்சாலை குஜராத்திற்கு மாற வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் ஒப்புதல் பெற்றது.
“மாநிலங்களுக்கு இடையிலான போட்டி இந்தியாவை வலிமையாக்கும் என பிரதமர் பேசுகிறார். ஆனால் நடுவர் மிகவும் வெளிப்படையாக ஒருதலைப்பட்சமாக இருந்தால், போட்டி ஒரு கேலிக்கூத்தாக மாறும்,” என்று ஜெய்ராம் ரமேஷ் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.