புதுடெல்லி: தலைநகர் டெல்லியிலிருந்து புறப்பட்ட விமானத்தில் திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டதைத் தொடர்ந்து அந்த விமானம் புறப்பட்ட இடத்துக்கே திரும்பி வந்தது.
திங்கட்கிழமை (டிசம்பர் 22) காலை 6.10 மணியளவில் டெல்லியில் இருந்து மும்பை நோக்கி ஏர் இந்தியாவின் ‘AI 887’ என்னும் போயிங் விமானம் புறப்பட்டது.
வான் நோக்கி எழும்பிய விமானம் ஏறத்தாழ 40 நிமிடங்கள் பறந்துகொண்டிருந்தபோது விமானத்தில் ஏதோ கோளாறு இருப்பதை விமானிகள் உணர்ந்தனர்.
விமானத்தின் இரண்டு இயந்திரங்களில் வலதுபக்க இயந்திரத்தில் எண்ணெய் அழுத்தம் குறைவானதால் அந்த இயந்திரம் சரிவர இயங்கவில்லை. சிறிதுநேரத்தில் அந்த அழுத்தம் பூஜ்ஜியத்துக்குச் சென்றதால் ஆபத்தான சூழ்நிலை ஏற்பட்டது.
நிலைமையை உணர்ந்த விமானிகள் சாமர்த்தியமாகச் செயல்பட்டனர். கிட்டத்தட்ட 30 நிமிடங்கள் பறந்த பின்னர், எஞ்சிய ஓர் இயந்திரத்தின் உதவியோடு டெல்லிக்கே விமானத்தைத் திருப்பிக் கொண்டு சென்றனர்.
டெல்லி விமான நிலையத்தில் விமானத்தை அவர்கள் பத்திரமாகத் தரை இறக்கினர்.
அதுபற்றிய தகவல் விமானப் பயணிகளுக்குத் தெரிவிக்கப்பட்டது. டெல்லியில் விமானம் தரை இறங்கியதும் பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டதாக விமானப் போக்குவரத்துத் தலைமை இயக்குநரகம் கூறியது.
சம்பவம் நிகழ்ந்தபோது விமானத்தில், பணியாளர்கள் உட்பட 335 பேர் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் அனைவருக்கும் மாற்று பயண ஏற்பாடுகளை ஏர் இந்தியா நிறுவனம் செய்துகொடுத்தது.
தொடர்புடைய செய்திகள்
காலை 10 மணியளவில் வேறொரு விமானத்தில் அவர்கள் மும்பைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக ஏர் இந்தியா கூறியது.
பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு மன்னிப்புக் கேட்டுக்கொள்வதாகவும் அது தனது அறிக்கையில் குறிப்பிட்டது.
அந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் கூறினர்.
விமானம் பறப்பதற்கு முன் நடத்தப்பட்ட சோதனையில் விமானத்தின் எண்ணெய் நுகர்வு தொடர்பான எந்த ஒரு கோளாறும் கண்டறியப்படவில்லை என்று தகவல்கள் கூறின.
இதேபோன்று, கடந்த வாரம் விஜயவாடாவில் இருந்து விசாகப்பட்டினம் செல்லவிருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்படுவதற்குச் சில விநாடிகளுக்கு முன்பு ரத்து செய்யப்பட்டது.
விமானம் புறப்படச் சிறிது நேரம் இருந்தபோது விமானத்தின் இயந்திரத்தில் கோளாறு இருப்பதை விமானி கண்டுபிடித்ததால் அந்த விமானச் சேவை அப்போது ரத்து செய்யப்பட்டது.

