புதுடெல்லி: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இருவரும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர்.
இருவரும் மத்திய கிழக்கில் நடந்து வரும் மோதல் குறித்தும் ஹோர்முஸ் நீரிணையைத் திறந்து வைப்பதன் முக்கியத்துவம் குறித்தும் ஆலோசித்ததாக இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் செர்ஜியோ கோர் கூறினார்.
ஈரான் உடனான உறவு சீரடைந்து வருவதாக அதிபர் டிரம்ப் அண்மையில் தெரிவித்திருந்த நிலையில், இந்தியப் பிரதமர் மோடியுடன் செவ்வாய்க்கிழமை அவர் பேசியதாகத் திரு கோர் தமது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அதிபர் டிரம்ப் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பேசியதைத் திரு மோடியும் உறுதி செய்தார்.
மத்திய கிழக்கில் நிலவும் சூழல் குறித்து பயனுள்ள கருத்துப் பரிமாற்றங்கள் நடைபெற்றதாக அவர் எக்ஸ் பதிவில் கூறியுள்ளார்.
பதற்றத்தைத் தணிப்பதையும் கூடிய விரைவில் அமைதியை மீட்டெடுப்பதையும் இந்தியா ஆதரிப்பதாகக் குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, ஹோர்முஸ் நீரிணை தொடர்ந்து திறந்திருப்பதும் பாதுகாப்பாக அணுகக்கூடியதாக இருப்பதை உறுதி செய்வதும் முழு உலகிற்கும் இன்றியமையாதது எனத் தெரிவித்துள்ளார்.
அமைதி, நிலைத்தன்மைக்கான முயற்சிகள் குறித்து இரு நாடுகளும் தொடர்ந்து தொடர்பில் இருக்க, இருதரப்பும் ஒப்புக்கொண்டதாகத் திரு மோடியின் எக்ஸ் தளப்பதிவு மேலும் கூறுகிறது.
வாஷிங்டனுக்கும் டெஹ்ரானுக்கும் இடையேயான மோதலை நிறுத்த நான்கு நாடுகள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. பாகிஸ்தான், சவூதி அரேபியா, துருக்கி, எகிப்து ஆகியவற்றின் முயற்சிகள் ஒருபுறமிருக்க, பேச்சுவார்த்தை மூலம் ஒரு தீர்வைக் காண அமெரிக்காவிடம் தாம் வலியுறுத்தியதாக இந்திய நாடாளுமன்றத்தில் தெரிவித்தார் பிரதமர் மோடி.
தொடர்புடைய செய்திகள்
“போர் தொடங்கியதிலிருந்து, மத்திய கிழக்கில் உள்ள பெரும்பாலான நாடுகளின் தலைவர்களுடன் நான் இரண்டு சுற்றுத் தொலைபேசி உரையாடல்களை நடத்தியுள்ளேன். நாங்கள் அனைத்து வளைகுடா நாடுகளுடனும் தொடர்ச்சியான தொடர்பில் இருக்கிறோம். மேலும் ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடனும் தொடர்பில் உள்ளோம்,” என்று பிரதமர் மோடி கூறினார்.
அரசதந்திர நடவடிக்கைகள் மூலம், போர்ச் சூழலிலும் இந்தியக் கப்பல்கள் பாதுகாப்பாகப் பயணம் செய்வதை இந்தியா உறுதிசெய்ய முயன்று வருவதாகவும் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க இந்தியா பேச்சுவார்த்தை முறையைத் தேர்ந்தெடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
வளைகுடாப் பகுதியில் உள்ள பேரளவிலான இந்தியப் புலம்பெயர் சமூகத்தின் பாதுகாப்பை உறுதிசெய்வதே இந்தியாவின் முன்னுரிமை என்று பிரதமர் மோடி திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

