மத்திய கிழக்கு நெருக்கடி: இந்திய நிறுவனங்களின் 4,335 விமானச் சேவைகள் ரத்து

மத்திய கிழக்கு நெருக்கடி: இந்திய நிறுவனங்களின் 4,335 விமானச் சேவைகள் ரத்து

படம்: ஏஎன்ஐ

16 Mar 2026 - 6:42 pm

2 mins read

புதுடெல்லி: மத்திய கிழக்கு வட்டாரத்தில் நிலவிவரும் பதற்றமான சூழல் காரணமாக இந்திய விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் இதுவரை 4,335 விமானச் சேவைகளை ரத்து செய்துள்ளதாக மத்திய பொது விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற வரவுசெலவுக் கூட்டத்தொடரின் ஆறாவது நாளான திங்கட்கிழமை (மார்ச் 16) மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்தபோது அவர் இதனைத் தெரிவித்தார்.

மத்திய கிழக்கு நெருக்கடியால் இந்திய நிறுவனங்களின் 4,335 விமானச் சேவைகளும், வெளிநாட்டு நிறுவனங்களின் 1,187 விமானச் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

வான்வழிப் பாதைகள் மூடப்பட்டுள்ள நிலையில் அப்பகுதிக்கு விமானங்களை இயக்குவதில் அர்த்தமில்லை என்றும் பயணிகளின் பாதுகாப்பே தங்களுக்கு முக்கியம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

பதற்றமான இந்தச் சூழலிலும் கிட்டத்தட்ட 219,780 பேர் பயணம் செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்தியப் பொது விமானப் போக்குவரத்து இயக்ககமும் விமானப் போக்குவரத்துத் துறை அதிகாரிகளும் அங்குள்ள அதிகாரிகளுடன் இணைந்து நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வருவதாகத் திரு ராம் மோகன் கூறினார்.

பயணிகள் போக்குவரத்து சீராக இருப்பதற்கு விமான நிறுவனங்களுடனும் உரிய அமைப்புகளுடனும் அமைச்சு அணுக்கமாக இணைந்து செயல்பட்டு வருகிறது.

விமான நிறுவனங்கள் தற்காலிக மாற்றங்களைச் செய்துவரும் வேளையில், பயணக் கட்டணம் திடீரென உயர்த்தப்படாமல், நியாயமான முறையில் இருப்பதை உறுதிசெய்யவும் விமானக் கட்டணங்களை அமைச்சு தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

மத்திய கிழக்கில் நிலவும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களால் வான்வழிப் பாதைகள் மூடப்பட்டிருப்பதோடு, எரிபொருள் கூடுதல் கட்டணம் உள்ளிட்ட காரணங்களால் விமானப் போக்குவரத்துத் துறை பெரும்பாதிப்பைச் சந்தித்து வருகின்றது.

இந்நிலையில், விமானப் பயணச்சீட்டு வாங்கியுள்ள பயணிகள் விமானப் பயண நேரம், பயண ஏற்பாடுகள் போன்றவை தொடர்பான அண்மைத் தகவல்களுக்கு சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்களுடன் தொடர்பில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்
இந்தியாவிமானம்போக்குவரத்துரத்துசேவைமத்திய கிழக்கு