தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஒன்றரை கோடி ரூபாய் சொத்தை அரசாங்கத்திற்கு எழுதிவைத்த முதியவர்

2 mins read
fd522e13-64b6-4123-b05f-74449540efbd
திரு நாத்து சிங் என்ற இம்முதியவர், இறந்தபின் தமது உடலை ஒரு மருத்துவக் கல்லூரிக்கு தானம் அளிக்க வேண்டும் என்றும் தமது இறுதிச்சடங்கில் தம் பிள்ளைகளை அனுமதிக்கக்கூடாது என்றும் கேட்டுக்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. படம்: இந்திய ஊடகம் -

முசாஃபர்நகர்: இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 80 வயது முதியவர் ஒருவர், தமக்குச் சொந்தமான ரூ.1.5 கோடி (S$246,450) மதிப்பிலான அசையாச் சொத்துகளை அம்மாநில ஆளுநர் பெயரில் உயில் எழுதி வைத்துள்ளார்.

நாத்து சிங் என்ற இந்த விவசாயி, தம் மகனும் மருமகளும் தம்மைச் சரிவர கவனிக்காததால் அவர்களுக்குத் தமது சொத்துகளை எழுதிவைக்க விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.

முசாஃபர்நகர் மாவட்டம், பிரல் எனும் சிற்றூரைச் சேர்ந்த திரு நாத்து சிங் இப்போது ஒரு முதியோர் இல்லத்தில் தங்கியிருக்கிறார். இவருக்கு ஒரு மகனும் மூன்று மகள்களும் உள்ளனர்.

தம் பிள்ளைகளின் பெயரில் சொத்துகளை எழுதிவைக்க விரும்பாத இவர், தாம் இறந்தபின் அவற்றை உ.பி. ஆளுநரிடம் ஒப்ப்டைக்கக் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார். தமது சொத்துகளைக் கொண்டு அரசாங்கம் ஒரு பள்ளியோ மருத்துவமனையோ திறக்க வேண்டும் என்பது இவரது விருப்பம்.

"இந்த வயதில் நான் என் மகன், மருமகளுடன் வசிக்க வேண்டும். ஆனால், அவர்கள் என்னைக் கண்டுகொள்வதில்லை. அதனால்தான் நான் இறந்தபிறகு எனது சொத்துகளை ஆளுநர் பெயருக்கு மாற்றிவிடுவது என்று என் மனத்தை மாற்றிக்கொண்டேன். அவை என் சொத்துகள் என்பதால் அவற்றை யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்க எனக்கு உரிமையுண்டு," என்று திரு நாத்து சிங் சொன்னதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த விஷயத்தில் திரு நாத்து சிங் உறுதியுடன் இருப்பதாக அவர் இப்போது தங்கியிருக்கும் முதியோர் இல்லத்தின் பொறுப்பாளர் ரேகா சிங் கூறினார்.

தம் வீடு, நிலம், மற்ற அசையாச் சொத்துகள் என அனைத்தையும் திரு நாத்து சிங் ஆளுநருக்கு வழங்க முடிவுசெய்துள்ளார்.